New Fee Refund Policy: கல்லூரிகள் இந்த மாணவர்களுக்கெல்லாம் முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும்: யுஜிசி அதிரடி!
New Fee Refund Policy 2024: செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் தன் கல்லூரி சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணத்தை முழுமையாகக் கல்லூரிகள் திருப்பி தரவேண்டும்.
தன்னுடைய கல்லூரி உயர்கல்வி சேர்க்கையை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ரத்து செய்யும் மாணவர்களுக்கு முழு கல்விக் கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும் என யுஜிசி அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களும் பெற்றோர்களும் உயர் கல்வி நிறுவனங்களின் கட்டண வசூல் குறித்துத் தொடர்ந்து புகார்களையும் குறைகளையும் யுஜிசிக்குத் தெரிவித்ததை அடுத்து, விரிவான கட்டணத் திருப்பிச் செலுத்தும் கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. 2024- 25ஆம் கல்வி ஆண்டு முதல் இந்த புதிய கட்டணத்தைத் திருப்பிச்செல்லும் கொள்கை அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும்
யுஜிசியின் 580ஆவது குழு கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு செயலர் மணிஷ் ஜோஷி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:
கல்லூரிகளில் சேர்ந்து குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் சேர்க்கையை ரத்து செய்துவிட்ட மாணவர்களுக்கு உரிய விதிமுறைகளை பின்பற்றி அவர்கள் செலுத்திய கட்டணங்களை திருப்பி தரவேண்டும். அதன்படி 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் தன் கல்லூரி சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணத்தை முழுமையாகக் கல்லூரிகள் திருப்பி தரவேண்டும்.
அதிகபட்சமாக ரூ.1,000 மட்டும் வசூலிக்கலாம்
அதேபோல், 2024ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதிக்குள் ரத்து செய்தால், சேர்க்கை பணிகளுக்காக அவர்களிடம் அதிகபட்சமாக ரூ.1,000 மட்டும் வசூலிக்கலாம். அதற்கு பின்பு சேர்க்கையை ரத்து செய்பவர்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கான கட்டணத்தை பிடித்தம் செய்து கொள்ளலாம். அதேநேரத்தில், மாணவர் சேர்க்கை முடிந்தபிறகு 30 நாட்கள் கழித்து எந்தவிதமான கட்டணத்தையும் மாணவர்களுக்கு உயர் கல்வி நிறுவனங்கள் திருப்பித்தர வேண்டியதில்லை.
மீறினால் என்ன தண்டனை?
இந்த கொள்கை யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு கல்வி நிறுவனத்துக்கும் பொருந்தும். பல்கலைக்கழக மானியக் குழு 1956-ன்படி, இந்த விதிக்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. எக்காரணம் கொண்டும் முழு கல்வியாண்டு அல்லது நடப்பு பருவத்துக்கான கட்டணங்களைப் பிடித்தம் செய்யக்கூடாது.
இல்லையெனில் விதிகளின்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். யுஜிசி 2018 தண்டனைகளின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உயர் கல்வி நிறுவனங்கள் உடனடியாக இந்த நடைமுறையை அமலுக்குக் கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு யுஜிசி சார்பில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு: https://www.ugc.gov.in/pdfnews/1654477_Fee-Refund-Policy-2024-25.pdf