UGC NET 2024: யுஜிசி நெட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம்; எப்படி? வழிமுறை இதோ!
UGC NET 2024 Correction Window: தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய நாளை இரவு 11.59 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் ஏதேனும் இருந்தால், மேற்கொள்ளலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. இதற்கு நாளை இரவு 11.59 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
யுஜிசி நெட் தேர்வு
இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் (Assistant professor ) பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். நெட் நுழைவுத் தேர்வு, இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நடத்தப்படும் என்று அண்மையில் யுஜிசி தெரிவித்தது. தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை கணினி முறையில் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் ஏதேனும் இருந்தால், மேற்கொள்ளலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. இதற்கு நாளை இரவு 11.59 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் கூடுதல் கட்டணத்தை, கிரெடிட் / டெபிட் கார்டுகள் அல்லது நெட் பேங்க்கிங் மூலம் செலுத்தலாம்.
திருத்தம் செய்வது எப்படி?
* தேர்வர்கள் https://ugcnet.ntaonline.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
* விண்ணப்ப எண், கடவுச் சொல் ஆகியவற்றை உள்ளிட்டு, உள்ளே செல்லவும்.
* திருத்த வேண்டிய விவரங்களை உள்ளிட்டு, சப்மிட் கொடுக்கவும்.
எதிலெல்லாம் திருத்தம் செய்யலாம்?
தேர்வர்கள் தங்களின் பெயர், புகைப்படம், கையெழுத்து, மொபைல் எண், இ- மெயில் முகவரி, வீட்டு முகவரி, தேர்வு மையம் ஆகியவற்றில் திருத்தம் செய்ய முடியாது. எனினும் தேர்வர்கள் தங்களின் பிறந்த தேதி, கேட்டகிரி, தந்தை பெயர், தாயின் பெயர் ஆகியவற்றில் திருத்தம் செய்யலாம்.
அதற்குப் பிறகு அனுமதிச் சீட்டு வெளியாகும். தொடர்ந்து தேர்வு நடைபெறும். கடந்த ஆண்டு, 9,45,918 தேர்வர்கள் விண்ணப்பித்த நிலையில், 6,95,928 பேர் 2023ஆம் ஆண்டுக்கான டிசம்பர் மாத அமர்வை எழுதினர். இந்தத் தேர்வு டிசம்பர் 6 முதல் 14 வரை 292 நகரங்களில் நடைபெற்றது.
கூடுதல் விவரங்களுக்கு: www.nta.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.
தேர்வர்கள் 011 40759000 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.