UGC எச்சரிக்கை! மோசடி கும்பலிடமிருந்து உஷார்: பணம் பறிக்கும் புது தந்திரம்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
தனிநபர்கள் அல்லது ஏஜென்சிகளுக்கு தங்கள் சார்பாக பணம் சேகரிக்கவோ அல்லது சலுகைகளை வழங்கவோ எந்த அதிகாரமும் இல்லை- யுஜிசி.

சில மோசடி நபர்கள், பொதுமக்களிடம் இருந்து பணத்தை கோருவதாகவும், போலியான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதாகக் கூறுவதாகவும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மோசடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லியில் உள்ள யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு பல்கலைக்கழகங்களை நிர்வகித்து, அவற்றுக்கான நிதி உதவிகளை அளித்து வருகிறது. இந்த நிலையில் யுஜிசி பொது மக்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொதுமக்களிடம் இருந்து பணம் கேட்கும் மோசடி கும்பல்
அதில், சில நேர்மையற்ற தனிநபர்கள் யுஜிசி அதிகாரிகள் என்று தவறாகக் கூறி, பொதுமக்களிடம் இருந்து பணத்தை கோருவதாகவும், போலியான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதாகக் கூறுவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் யுஜிசி தனது அனைத்து அதிகாரப்பூர்வ பணிகளும் கடுமையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்கிறது. மேலும், தனிநபர்கள் அல்லது ஏஜென்சிகளுக்கு தங்கள் சார்பாக பணம் சேகரிக்கவோ அல்லது சலுகைகளை வழங்கவோ எந்த அதிகாரமும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
மோசடி அழைப்புக்கு பலியாக வேண்டாம்
பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், இதுபோன்ற மோசடி அழைப்புகள் அல்லது கோரிக்கைகளுக்கு பலியாக வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுவதாக யுஜிசி தெரிவித்துள்ளது.
ஏதேனும் இத்தகைய சம்பவம் அல்லது சந்தேகத்திற்கு இடமான செயல்பாடு குறித்து உங்களுக்குத் தெரியவந்தால், உடனடியாக உங்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது யுஜிசியில் உள்ள தலைமை விழிப்புணர்வு அதிகாரியிடமோ தெரிவிக்கலாம்.
தொடர்பு எண்கள்
யுஜிசியின் தலைமை விழிப்புணர்வு அதிகாரியை 011-23239337, 23604121 என்ற தொலைபேசி எண்களிலும், secy.ugc@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
பொதுமக்கள் தங்கள் புகார்களை https://pgportal.gov.in/ என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு செயலாளர் மணிஷ் ஜோஷி தெரிவித்துள்ளார்.























