Group 1 Vacancy: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணியிடங்கள் கடும் குறைப்பு: தேர்வர்கள் கொந்தளிப்பு, அதிகரிக்க கோரிக்கை!
TNPSC Group 1 Vacancy 2026: முன்னெப்போதும் இல்லாத அளவு குறைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணியிடங்கள்; வெறும் 26 என்னும் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா? தேர்வர்கள் எதிர்பார்ப்பு.

2026ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணியிடங்கள் கணிசமான அளவு குறைக்கப்பட்டிருப்பதாகவும் அதை உடனடியாக மூன்று மடங்காவது உயர்த்த வேண்டும் எனவும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குரூப் 1 பணியிடங்கள் மூலம் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி), கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், பதிவாளர் உள்ளிட்ட உயரிய பதவிகள் நிரப்பப்படும்.
90:10 விகிதத்தில் பணியிடங்கள்
இந்தப் பணியிடங்கள் பெரும்பாலும் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் (90%) நிலையில், வெறும் 10 சதவீத பணியிடங்களே டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனமாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்த 10 சதவீத இடங்கள்கூட முழுமையாக நிரப்பப்படவில்லை என்று தேர்வர்கள் குமுறுகின்றனர்.
ஏற்கெனவே உயர், உச்ச நீதிமன்றங்கள் 33 சதவீத அளவுக்கு நேரடி நியமனம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டும் அவை அமலில் இல்லை. அரசு ஊழியர் சங்கங்கள் இதனை அமல்படுத்த அரசுகளை விடுவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
தேர்வர்கள் கடும் எதிர்ப்பு
இந்த நிலையில் இந்த ஆண்டு வெறும் 26 காலி இடங்கள் மட்டுமே டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட உள்ளன. குறிப்பாக 2 துணை ஆட்சியர்கள், 8 மாவட்ட பதிவாளர்கள், 3 கூட்டுறவு துணை பதிவாளர்கள், இரு வணிகவரி உதவி ஆணையர்கள், ஒரு தொழிலாளர் நல உதவி ஆணையர் என 26 இடங்களுக்கு மட்டுமே அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு தேர்வர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் எப்படி?
2015 - 74
2017 - 85
2019- 181
2020- 66
2022- 93
2024 - 90
2025-78
ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதிகபட்சமாக 2019ஆம் ஆண்டு இரு ஆண்டுகளுக்குச் சேர்த்து 181 இடங்களுக்கு தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
26 பேருக்கு மட்டுமே வேலையா?
ஆண்டுதோறும் சுமார் 1.5 லட்சம் மூலம் 2 லட்சம் வரை குரூப் 1 தேர்வை எழுதுகின்றனர். இதில் வெறும் 26 பேருக்கு மட்டுமே வேலை என்பது அநீதி என்று தேர்வர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கடந்த 2025ஆம் ஆண்டு 1.6 லட்சம் முதல்நிலைத் தேர்வை எழுதிய நிலையில், சுமார் 1900 பேர் முதன்மைத் தேர்வை எழுதத் தேர்வாகி இருந்தனர். கடந்த பத்தாண்டுகளில் குரூப் 1 பதவிகளுக்கு 500-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஆண்டுக்கு சராசரியாக 50-க்கும் மேற்பட்டோர் தேர்வாகியுள்ளனர்.
இந்த சூழலில், நடப்பாண்டில் மட்டும் ஆண்டு சராசரியில் பாதிக்கும் குறைவாகவும், முந்தைய ஆண்டுகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கும் மட்டுமே அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு குரூப் 1 பணியிடங்களை நிரப்புவது சரியல்ல என்று குரல்கள் எழுந்துள்ளன.
டிஎன்பிஎஸ்சி சொல்வது என்ன?
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, ’’பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் 8 மாதங்களுக்கு முன்னால் பெறப்பட்டவை. அவற்றை அடிப்படையாகக் கொண்டே தற்போது அறிவிக்கை வெளியாகி உள்ளது.
குரூப் 1 இடங்களை அதிகரிக்கக் கோரி எல்லா பக்கங்களில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், விரைவில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, அறிவிப்பு வெளியாகும்’’ என்று தெரிவித்தனர்.
Before You Go
Pregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!
ட்ரெண்டிங் செய்திகள்























