TNEA Students Data Leak: பொறியியல் கலந்தாய்வு; கசிந்த 1 லட்சம் மாணவர்களின் மொபைல் எண்கள்; சைபர் கிரைமில் புகார்!
மாணவர்களின் விவரங்களை சுய நலத்துக்காக சில சமூக விஷமிகள் வெளியே கசிய விட்டுள்ளனர். எங்களின் தரப்பில் இருந்து எந்த விவரங்களும் கசியவில்லை.
பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பித்த 1 லட்சம் மாணவர்களின் மொபைல் எண்கள் கசிந்த நிலையில், கலந்தாய்வை நடத்தும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளிக்க உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், அவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. சிறப்புப் பிரிவு இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், தற்போது முதல் சுற்றுக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் சேர விண்ணப்பித்து உள்ள மாணவர்களின் விவரங்கள் மொபைல் எண்களுடன் வெளியாகி உள்ளன. குறிப்பாக 1 லட்சத்துக்கும் அதிகமானோரின் விவரங்கள் தனியார் கல்லூரிகளுக்கான இடைத் தரகர்களுக்கு விற்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்தத் தகவல்கள், 2 3ஆம் கட்டத் தனியார் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
மொபைல் எண்கள் லீக்
ஆண்டும்தோறும் கலந்தாய்வை நடத்தும் டோட் (DOTE) எனப்படும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம், கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை மதிப்பெண்கள், பெயர் உள்ளிட்ட விவரங்களைத் தனது இணையதளத்தில் வெளியிடும். ஆனால் அதில், மாணவர்களுடைய மொபைல் எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் இடம்பெறாது. ஆனால் தற்போது மாணவர்களுடைய மொபைல் எண்களோடு கூடிய விவரங்கள் வெளியே கசிந்துள்ளன.
இதுகுறித்துக் கலந்தாய்வை நடத்தும் தொழில்நுட்ப கல்வி ஆணையர் கூறும்போது, ’’மாணவர்களின் விவரங்களை சுய நலத்துக்காக சில சமூக விஷமிகள் வெளியே கசிய விட்டுள்ளனர். எங்களின் தரப்பில் இருந்து எந்த விவரங்களும் கசியவில்லை. சைபர் கிரைம் போலீஸிடம் இதுகுறித்து புகார் அளிக்க உள்ளோம். அதே நேரத்தில் ஒரு லட்சம் மாணவர்களின் விவரங்கள் கசிந்துள்ளன. அதில், 88.34 சதவீத தொலைபேசி எண்கள் உண்மையானவை இல்லை.
12 % தொலைபேசி எண்கள் சரியானவை
12 சதவீத எண்கள் மட்டுமே சரியானவை. இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தம் இல்லாத தொலைபேசி அழைப்புகள் வந்தால் மாணவர்கள் அவற்றை ஏற்கக் கூடாது, நிராகரிக்க வேண்டும்" என்று தொழில்நுட்பக் கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், 1800 4250110 என்ற இலவச உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.