TRUST Exam: ரூ.4 ஆயிரம் உதவித்தொகை; ஊரக திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
2023- 2024ஆம் கல்வியாண்டிற்கான “ஊரகத் திறனாய்வு தேர்வு”-க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும்.
2023- 2024ஆம் கல்வியாண்டிற்கான “ஊரகத் திறனாய்வு தேர்வு”-க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும்.
தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் துறையால் ஆண்டு தோறும் தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு நடைபெற்று வருகிறது. கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வு தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தகுதியான தேர்வர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
என்ன தகுதி?
ஊரகப் பகுதியில் அதாவது கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2023-2024ஆம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்கள் இத்திறனாய்வு தேர்வு எழுதுவதற்கு தகுதி உடையவர் ஆவர். நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க இயலாது. டிசம்பர் 16ஆம் தேதி திறனாய்வுத் தேர்வு நடைபெறுகிறது.
என்ன உதவித் தொகை?
ஊரகத் திறனாய்வு தேர்வு திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 வருடங்கள், 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
ஆண்டு வருமானம்
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ மாணவியரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ, 1,00,000/-க்கு (ரூபாய் ஒரு இலட்சத்திற்கு) மிகாமல் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தல்
தேர்வுக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் 14.11.2023 முதல் 24.11.2023 வரை பதிவிறக்கம் செய்தனர். அவற்றைப் பூர்த்தி செய்து, ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய (நவம்பர் 28) இன்று கடைசித் தேதி ஆகும். பள்ளி ஆசிரியர்கள், தங்களின் பள்ளிக்கு வழங்கப்பட்ட யூசர் ஐடி, பாஸ்வேர்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெறப்பட்ட விண்ணப்பங்களில் உள்ளவாறு அனைத்து விவரங்களும் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை தலைமையாசிரியர் உறுதி செய்த பிறகு இணையதளம் மூலம் தேர்வுக் கட்டணத்தை செலுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது. தேர்வு கட்டணம் செலுத்திய பிறகு மாணவர்களின் விவரங்களை திருத்தம் மேற்கொள்ள இயலாது என்ற விவரத்தினை பள்ளித் தலைமையாசிரியரிடம் அறிவுறுத்த வேண்டும்.
தேர்வுக் கட்டணம் செலுத்திய பிறகு Summary Report, பள்ளியில் பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் (தேர்வர்களின் விவரங்களுடன்) முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்திட பள்ளித் தலைமை ஆசிரியாகளை அறிவுறுத்த வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவித்துள்ளார்.
விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய: https://tnegadge.s3.amazonaws.com/notification/TRUST/1699517012.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: www.dge.tn.gov.in