TN RTE Admission: தனியார் பள்ளிகளில் இலவசமாகப் படிக்கலாம்; ஏப்.22 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Tamil Nadu RTE Admission 2024-25: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர ஏப்ரல் 22 முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர ஏப்ரல் 22 முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் மே 25 வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள், 2011, விதி எண் 4 (1) இன்படி எல்.கே.ஜி அல்லது முதல் வகுப்பிற்கு அருகாமையிடம் என்பது 1 கிலோ மீட்டர் சுற்றளவு ஆகும்.
எமிஸ் கணக்கில் 25%
25% இடஒதுக்கீட்டிற்கான சேரக்கைக்கு தகுதியான இடங்களின்எண்ணிக்கை, 2023 -2024 ஆம் கல்வி ஆண்டில் நுழைவு நிலை வகுப்பில் எமிஸ் இணையதளத்தின்படி உள்ள மாணாக்கர்களின் எண்ணிக்கையில் 25%ஐ கணக்கிட்டு சம்பந்தப்பட்ட பள்ளியின் EMIS லாகினில் 10.04.2024 அன்று வெளியிடப்படும்.
சார்ந்த பள்ளியின் முதல்வர் பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களை அன்றைய தினமே 25% சேர்க்கைக்கான தகுதியான இடங்களை பள்ளியின் தகவல் பலகையில் பொதுமக்கள் அறியும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும். 10.04.2024 அன்றே பள்ளி வாரியான தகுதியான இடங்களின் எண்ணிக்கை இணைய தளத்திலும் (tnemis.tnschools.gov.in) வெளியிடப்படும்.
சட்டப்பிரிவு 12 (1) (சி) இல் சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் 22.04.2024 முதல் 20.05.2024 வரை எங்கிருந்து வேண்டுமானாலும் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
முறையான அங்கீகாரம் அவசியம்
அந்தந்தப் பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப்பட்டால், சார்ந்த பெற்றோர்களுக்கு ஒப்புகைச் சீட்டு (அரசாணை (நிலை) எண். 60 பள்ளிக் கல்வித்துறை நாள் 01.04.2013 இல் உள்ள ஒப்புகைச் சீட்டில்) உடன் தவறாது வழங்கப்பட வேண்டும். இவ்விண்ணப்பங்களை பள்ளியிலேயே இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம் அல்லது அருகில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் / மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) / மாவட்டக் கல்வி அலுவலர் / வட்டாரக் கல்வி அலுவலர் / ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி/வட்டார வள மையம், ஆகிய அலுவலகங்களில் பெற்று இணைய வழியில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
RTE 25% இட ஒதுக்கீட்டின் கீழ் மாணாக்கர்கள் சேர்க்கை செய்யப்படும் பள்ளிகள் முறையாக அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாடு பள்ளிகள் (கட்டண வசூல் ஒழுங்குமுறை ) சட்டம் 2009-ன்படி தனியார் பள்ளிகள், தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயக்கப்படும் கட்டணம், EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
என்னென்ன சான்றுகள் முக்கியம்?
- பிறப்புச் சான்று
- வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கானச் சான்று
- வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினருக்கானச் சான்று
- நலிவடைந்த பிரிவினருக்கான வருமானச் சான்று
- இருப்பிடச் சான்று
இணையதளம் மூலமாக விண்ணயிக்கப்பட்ட விண்ணப்பங்களை 21.05.2024 முதல் 25.05.2024 மாலை 5 மணி வரை மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கூர்ந்தாய்வு செய்ய வேண்டும். தகுதியான விண்ணப்பங்கள், தகுதியற்ற விண்ணப்பங்கள், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் விடுபட்டதற்கான காரணங்களை முறையாக விளக்க வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு: https://.tnschools.gov.in/