பிளஸ் 2 தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடம் - மாவட்ட கலெக்டர் வருத்தம்
பன்னிரெண்டாம் வகுப்பில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் அதிகம் கவனம் செலுத்துவதை விட வரும் காலங்களில் ஆறாம் வகுப்பு முதல் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
12 -ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள்
12 -ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகளை, மே 6 -ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை டிபிஐ வளாகத்தில் வெளியிட்டன. குறிப்பாக சென்னை, நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 12 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாகியுள்ளன. மாணவர்கள் 92.37 சதவிகிதமும் மாணவிகள் 96.44 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தை பொருத்தவரையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் 12,724, மாணவிகள் 13,827 மொத்தம் 26 ஆயிரத்து 551 பேர் தேர்ச்சி எழுதினார். மேலும் இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 11,037, மாணவிகள் 12,984 பேர் என மொத்தம் 24,021 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 86.74 சதவீதமும் மாணவிகள் 93.90 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தை பொருத்தவரையில் மொத்தமாக தேர்ச்சி சதவீதத்தை பார்த்தால் 90.47 விழுக்காடு பெற்று தமிழகத்திலேயே கடைசி மாவட்டமாக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கையில்
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 0.6 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், தமிழகத்தில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் கடைசி இடம் பிடித்துள்ளது வருத்தம் அளிக்கும் நிலையில் இருந்தாலும் முதலிடத்திற்கும் கடைசி இடத்திற்கும் 7 சதவீத வித்தியாசத்தில் இருப்பதாகவும், வரும் காலங்களில் விடுமுறை எடுக்கும் மாணவர்களை கண்காணித்து அவர்கள் ஊக்குவிக்கப்பட்டு தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த உள்ளதாகவும்
மாணவர்களின் கல்வித்தரம் உயர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும், அடுத்தடுத்து வரக்கூடிய ஆண்டுகளில் தொடர்ந்து சதவீதம் உயரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் ஆசிரியர்கள் முழுமையாக கவனம் செலுத்தி இருக்கிறார்கள். தற்போது வந்துள்ள தேர்ச்சி சதவீதம் என்பது நல்ல நிலையில் தான் இருக்கிறது. பன்னிரெண்டாம் வகுப்பில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் அதிகம் கவனம் செலுத்துவதை விட வரும் காலங்களில் ஆறாம் வகுப்பு முதல் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த முயற்சி மாணவர்களின் உயர்கல்விக்கு பயன்பெறும் என தெரிவித்தார். கல்லூரி கனவு திட்டத்தின் மூலம் மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கான வழிகாட்டு முறைகள் கொடுக்கப்படுவதாகவும் அது மாணவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.