10th Tamil Question Bank: 10ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் எளிதாக சதம் அடிக்கலாம்; மாதிரி வினாத்தாள் இதோ!
ஆசிரியர்களைக் கொண்டு உருவாக்கிய பொதுத் தேர்வுக்கான 10, 12ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வங்கியை ABP Nadu சார்பில் தினந்தோறும் வெளியிட உள்ளோம்.
தாய் மொழியான தமிழில் சதம் என்பது சில காலம் முன்பு வரை கனவாகவே இருந்தது. இப்போதெல்லாம் மாணவர்கள் மொழிப்பாடத்திலும் சதம் அடித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதிலும் இருக்கும் அர்ப்பணிப்பு மிக்க அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு உருவாக்கிய பொதுத் தேர்வுக்கான 10, 12ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வங்கியை ABP Nadu சார்பில் தினந்தோறும் வெளியிட உள்ளோம். அந்த வகையில் 10ஆம் வகுப்பு தமிழ் பாடத்துக்கான மாதிரி வினாத்தாள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
பயிற்சித் தேர்வு
பாடம் – தமிழ்
காலம்: 3.00 மணி மதிப்பெண்: 100
பகுதி – 1 (மதிப்பெண்கள்: 15)
(i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக. [15 x 1 = 15]
- ஐம்பெருங்காப்பியங்களுள் பொருந்தாததைத் தேர்க.
அ) நீலகேசி ஆ) சிலப்பதிகாரம்
இ) மணிமேகலை ஈ) சீவக சிந்தாமணி
- ‘சிந்துக்குத் தந்தை என்று பாராட்டப்பட்டவர்…
(அ) பாரதியார் (ஆ) பாரதிதாசன்
(இ) சுரதா (ஈ) கவிமணி
- ‘கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ – தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே
அ) பாடிய; கேட்டவர் ஆ) பாடல்; பாடிய
இ) கேட்டவர்; பாடிய ஈ) பாடல்; கேட்டவர்
- ‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி …………………………….
அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
ஆ) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
இ) பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
- புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது’ – இவ்வடிகளில் அமைந்துள்ள முரண் சொல்………
அ) என்னுடல், என் மனம் (ஆ) புல்லரிக்காது இறந்துவிடாது
(இ) புகழ்ந்தால், இகழ்ந்தால் (ஈ) புகழ்ந்தால் என் மனம்
- பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
அ) துலா ஆ) சீலா
இ) குலா ஈ) இலா
- சாலச் சிறந்தது’ என்பது …….. தொடராகும்.
(அ) பெயரெச்சத்தொடர் (ஆ) உரிச்சொல்தொடர்
(இ) விளித்தொடர் (ஈ) வினையெச்சத்தொடர்
- நன்மொழி என்பதன் இலக்கணக் குறிப்பு ….
(அ) வியங்கோள் வினைமுற்று (ஆ) பண்புத்தொகை
(இ) வினையெச்சம் (ஈ) உம்மைத்தொகை
- அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது
(அ) வேற்றுமை உருபு (ஆ) எழுவாய்
(இ) உவம உருபு (ஈ) உரிச்சொல்
- விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பயணம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு – இதன் விருந்து போற்றிய நிலை……….
(அ) நிலத்திற்கேற்ற விருந்து (ஆ) இன்மையிலும் விருந்து
(இ) இரவிலும் விருந்து (ஈ) உற்றாரின் விருந்து
- ‘தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்’ – என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்?
அ) மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர்
ஆ) மிகுந்த செல்வம் உடையவர்
இ) பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்
ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர்
பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.
இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல் இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை! அறிக!
- இப்பாடலின் ஆசிரியர் யார்?
(அ) கண்ண தாசன் (ஆ) பாரதிதாசன்
(இ) ஜெயகாந்தன் (ஈ) பாரதியார்
- இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?
(அ) அன்னை மொழியே (ஆ) காசிக்காண்டம்
(இ) முல்லைப்பாட்டு (ஈ) காலக்கணிதம்
- முத்தொழில்கள் யாவை?
(அ) அறம், பொருள், இன்பம் (ஆ) இயல், இசை, நாடகம்
(இ) ஆக்கல், அழித்தல், காத்தல் (ஈ) ஆடல், பாடல், ஓடுதல்
- இப்பாடல் இடம் பெற்ற அடி எதுகைகளை எழுதுக.
(அ) இவை சரி, இவை தவறு (ஆ) சரி, தவறு
(இ) இவை, இயம்பு (ஈ) மூன்றும், ஆறும்
பகுதி – II (மதிப்பெண்கள்: 18)
பிரிவு – 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.
21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [4×2 = 8]
- விடைக்கேற்ற வினா அமைக்க.
(அ) தமிழ்நாட்டு மக்கள் பயன்படுத்தும் குடும்ப அட்டைகள் திறன்
அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன.
(ஆ) கிராமப்புறங்களில் பயிலும் மாணவர்களுக்காக ஊரகத் திறனறித்தேர்வு
நடத்தப்படுகிறது
- பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.?
- மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
- பருவநிலை, சூழல், வீசும் வேகம் ஆகியவற்றிற்கேற்ப காற்றிற்கு வழங்கப்படும் பல்வேறு பெயர்களைக் கூறு..
- தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி’ என்பது இலக்கியச் செய்தி விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.
- குன்றேறி ‘ எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
பிரிவு – 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்கவும். [5×2 = 10]
- வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றுக.
பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார். போட்டித் தேர்வில் வென்றார்.
- சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக.
“தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை
தேரும் சிலப்பதி காறமதை
ஊனிலே எம்முயிர் உல்லலவும் – நிதம்
ஓதி யுனர்ந்தின் புருவோமே”
- இருசொற்களைப் பயன்படுத்தி ஒரு சொல் அமைக்க: இயற்கை – செயற்கை
- கலைச்சொற்கள் தருக.
Philosopher Document
- தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்துகொண்டு தொடர்களை முழுமை செய்க.
பசுமையான …………….. ஐக் …………….. கண்ணுக்கு நல்லது.(காணுதல் /காட்சி)
- நிறுத்தக் குறிகளை இடுக.
- பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன்
- இலக்கணக் குறிப்பு தருக.
ஆடுக கேள்வியினான்
பகுதி – III (மதிப்பெண்க ள்: 18)
பிரிவு -1
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 x 3 = 6]
- ‘புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.’
இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
- சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.
- உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக
திருவள்ளுவர் இல்லறவியலில் ‘விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே’ அமைத்திருக்கிறார்; இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே என்கிறார்; முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை ” மோப்பக் குழையும் அனிச்சம்” என்ற குறளில் எடுத்துரைக்கிறார். விருந்தினரைப் போற்றுதல் இல்லறக் கடமையாக இருந்தது.
(அ) விருந்தோம்பல் பற்றி ஓர் இயலை எழுதியவர் யார்?
(ஆ) திருவள்ளுவர் விருந்தோம்பலை கூறிய இயலின் பெயர் என்ன?
(இ) ‘முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும்’ என்பதனை
உணர்த்தும் குறள் எது?
பிரிவு – 2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.
(34 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும) [2 x 3 = 6]
- வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
- தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.
- அடிபிறழாமல் எழுதுக.
(அ) “வாளால் அறுத்து” எனத் தொடங்கும் பெருமாள் திருமொழி பாடல்
(அல்லது)
(ஆ) “நவமணி வடக்க யில்” எனத் தொடங்கும் தேம்பாவணிப் பாடல்.
பிரிவு – 3
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 x 3 = 6]
- வெண்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.
- ‘கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை எல்லாம் ஒருங்கு கெடும் – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
- தற்குறிப்பேற்றணி - விளக்குக.
பகுதி – IV (மதிப்பெண்கள்: 25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. [5 x 5 = 25]
- (அ) இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக
(அல்ல து)
(ஆ). நயங்களைப் பாராட்டி எழுதுக.
கல்லும் மலையும் குதித்து வந்தேன் - பெருங்
காடும் செடியும் கடந்துவந்தேன
எல்லை விரிந்த சமவெளி - எங்கும் நான்
இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்
ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்-பல
ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்
ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன் - மணல்
உடைகள் பொங்கிட ஓடிவந்தேன்
- (அ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
(அல்லது)
(ஆ) உங்களின் நண்பர், பிறந்தநாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ்.
இராமகிருஷ்ணனின், “ கால்முளைத்த கதைகள்” என்னும் நூல் குறித்த
கருத்துகளைக் கடிதமாக எழுதுக
- (அ) படம் உணர்த்தும் கருத்தை நயமுற ஐந்து வரிகளில் எழுதுக.
- நூலக உறுப்பினராவதற்கான படிவம் நிரப்புக.
- (அ) கேள்விச் செல்வத்தின் அவசியத்தைக் குறித்து வள்ளுவர் வழி விளக்குக.
(அல்லது)
(ஆ) மொழிபெயர்க்க.
Malar : Devi, switch off the lights when you leave the room.
Devi : Yeah. We have to save electricity…
Malar : Our nation spends a lot of electricity for lighting up our streets in the night.
Devi : Who knows? In future, our country may launch artificial moons to light our night time sky!
Malar : I have read some other countries are going to launch these types of illumination satellites
near future.
Devi : Superb news! If we launch artificial moons, they can assist in disaster relief by beaming light on
areas that lost power!
பகுதி – V(மதிப்பெண்கள் : 24)
அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. [3 x 8 = 24]
- (அ) நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின்
முன்னேற்றத்தில் மாணவர் பங்கு – குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க
அளவில் மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்’ என்ற தலைப்பில் மேடை உரை
எழுதுக.
(அல்லது)
(ஆ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
- (அ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
(அல்லது)
(ஆ) அழகிரிசாமியின் ‘ஒருவன் இருக்கிறான்’ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதைமாந்தர் குறித்து எழுதுக..
- (அ) நூலகம் காட்டும் அறிவு’ – என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்று தருக.
(அல்லது)
(ஆ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக.
முன்னுரை –தமிழின் சிறப்பு – தொன்மை – இலக்கிய இலக்கண வளம் –
மொழிகளின் தாய்– முடிவுரை
மாதிரி வினாத்தாள் உருவாக்கம்
- ம. இளவரசு (A3 குழு),
பட்டதாரி ஆசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, அரசம்பாளையம்,
கோவை – 642109.