(Source: ECI/ABP News/ABP Majha)
TN 10th Exam 2024: 9.4 லட்சம் மாணவர்கள் எழுதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு; நாளை தொடக்கம்
தமிழ்நாட்டு பள்ளிக் கல்வி மாணவர்களுக்கு 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
10th Standard Common Exam : தமிழகத்தில் மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நாளை (மார்ச் 26) தொடங்குகிறது. இத்தேர்வை 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
முன்னதாக தமிழ்நாட்டு பள்ளிக் கல்வி மாணவர்களுக்கு பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 22-ம் தேதி நிறைவடைந்தது. அதேபோல 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 4-ல் தொடங்கிய நிலையில், இன்றுடன் (மார்ச் 25ஆம் தேதி) நிறைவடைகிறது.
இந்த நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (மார்ச் 26) தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான நாளை, தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.
9.38 லட்சம் பேர் எழுதும் தேர்வு
பொதுத் தேர்வை சுமார் 9.10 லட்சம் மாணவ, மாணவிகள், 28,827 தனித் தேர்வர்கள் மற்றும் 235 சிறை கைதிகள் உட்பட மொத்தம் 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர். மாநிலம் முழுவதும் 12,616 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் தேர்வுகளில் கலந்துகொள்கின்றனர். இதையொட்டி, தமிழகம் முழுவதும் 4,107 தேரு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கண்காணிப்புப் பணியில் 48 ஆயிரம் ஆசிரியர்கள்
பொதுத் தேர்வு மையங்களுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் சுமார் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முறைகேடுகளை தடுக்கவும் தேர்தல் பணிகளைக் கண்காணிக்கவும் 4,591 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல 304 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தேர்வு மையங்களில் என்னென்ன விதிமுறைகள்?
தேர்வு மையத்துக்குள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு, மின்சார சாதனங்களை எடுத்துச்செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆள்மாறாட்டம் செய்வது, விடைத்தாள் மாற்றம் செய்வது, தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடப்பது ஆகிய ஒழுங்கீன செயல்களைச் செய்யும் மாணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டு அல்லது நிரந்தரமாகத் தேர்வு எழுத தடை விதிக்கப்படும். ஒழுங்கீனச் செயலை ஊக்கப்படுத்த முயன்றால், பள்ளி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தம் பணி எப்போது?
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 12 முதல் 22-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் மே 10-ம் தேதி வெளியாகும் என அரசுத் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.