”ஒரே வீட்டில் IPS & IFS..! சாதித்த தமிழக அக்கா தங்கை” எங்கே, எப்படி தெரியுமா..?
"தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞர் வெண்ணிலா முருகேசன் தம்பதியினர், மகள்கள் இருவரும் ஒரே ஆண்டில் யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்"

தமிழ்நாட்டைச் சேர்ந்த சகோதரிகள் கவின்மொழி மற்றும் நிலா பாரதி ஆகியோர் ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் ஆகிய தேர்வுகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.
யு.பி.எஸ்.சி தேர்வு
இந்திய அளவில் மிக முக்கிய போட்டி தேர்வு ஆக, குடிமைப் பணி தேர்வுகள் இருந்து வருகின்றன. இந்தத் தேர்வு மூலம் ஐ.ஏ.lஎஸ், ஐ.பி.எஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் இந்தியாவில் உள்ள உயரிய அரசு பதவிகளில் இடம் கிடைக்கும்.
சிவில் சர்வீஸ் தேர்வு என சொல்லக்கூடிய இந்த தேர்வுகளில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இதற்காக முதல்நிலைத் தேர்வு எழுதி தேர்வாக வேண்டும். இதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். இதில் போட்டியாளர்கள் பெரும் மதிப்பெண்களை வைத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படும். அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஐஏஎஸ் தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தன. இந்தாண்டு வெளியான ஐபிஎஸ் தேர்வு முடிவுகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கணிசமான அளவில் வெற்றி பெற்றிருந்தனர்.
ஐ.எப்.எஸ் தேர்வு முடிவுகள் - IFS Results
இந்திய வனப்பணி சேர்வதற்கான தேர்வுகள் நடந்து நடந்து முடிந்து, தேர்வு எழுதிய மாணவர்கள் முடிவுக்காக காத்திருந்தனர். இந்திய அளவில் 150 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டது. முதலில் முதல்நிலை தேர்வு முடிந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 24 முதல் டிசம்பர் 1ம் தேதி வரை மெயின் தேர்வு நடத்தப்பட்டது. இந்தாண்டு ஜனவரி மாதம் மெயின் தேர்வு முடிவுகள் வெளியானது.
தமிழ்நாட்டில் இருந்து 10 பேர் தேர்ச்சி
இதனைத் தொடர்ந்து நேர்காணல் நடைபெற்றது. இந்தியாவில் இந்தத் தேர்வுகளில் 143 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து மொத்தம் 10 மாணவர்கள் மட்டும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 4 பேர் பெண்கள்.
இதில் தமிழ்நாட்டை சேர்ந்த நிலபாரதி என்பவர் இந்திய அளவில் 24 வது இடத்தை பெற்றுள்ளார். தமிழ்நாட்டு அளவில் இவர் முதலிடத்தை பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன பயிற்சி மையத்தில் பயிற்சி வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த நிலா பாரதி ?
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த அமையப்பட்டு கிராமத்தை சேர்ந்த கவிஞர் வெண்ணிலா - முருகேசன் தம்பதியின் மகள் நிலா பாரதி. கவிஞர் வெண்ணிலா பல்வேறு புத்தகங்களை எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள கவிஞர் வெண்ணிலா, " எங்களின் அன்பு மகள் மு வெ நிலாபாரதி தற்போது வெளியாகியுள்ள UPSC, IFOS தேர்வில் இந்திய அளவில் 24வது இடம் பிடித்திருக்கிறாள்.
கடின உழைப்பு, இடைவிடா முயற்சியில் இவ்விடத்தை அடைந்திருக்கிறாள். இரு மகள்கள் UPSC தேர்வில் வெற்றி பெற்றிருக்கிற இந்நேரத்தில் என் அப்பாவை, நண்பர்களை, உடனிருந்து வழிகாட்டும் தோழமைகளை மகிழ்வுடன் நினைத்துக்கொள்கிறேன். வாழ்த்துகள் தங்கக்குட்டி என பதிவு செய்துள்ளார்.
ஒரே வீட்டில் ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ்
கவிஞர் வெண்ணிலா முருகேசன் இரு தம்பதியினரின் மூத்த மகள் கவிமொழி அண்மையில் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். இந்திய அளவில் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், 546 வது இடத்தை பெற்று தேர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது. கவின்மொழி குன்றத்தூர் நகராட்சி ஆணையராக பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், அவரது தங்கை நிலா பாரதி தற்போது வனப் பணிக்கு தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரே ஆண்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவரும் ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எஃப்.எஸ் ஆகிய தேர்வுகளில் வெற்றி பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.





















