தமிழ்நாட்டிலேயே முதல்முறை: அரசுப் பள்ளியில் வரலாற்று ஆய்விருக்கை- மாணவர்கள் குதூகலம்
தமிழகத்திலேயே முதல் முறையாக முன்னோடி முயற்சியாக திருவாரூர் மாவட்டம், தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் வரலாற்று ஆய்விருக்கை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே முதல் முறையாக முன்னோடி முயற்சியாக திருவாரூர் மாவட்டம், தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் வரலாற்று ஆய்விருக்கை தொடங்கப்பட்டுள்ளது.
ஆய்வு இருக்கைகள் பொதுவாகப் பல்கலைக்கழகங்களில் மட்டுமே அமைக்கப்படும். ஆய்வு இருக்கை என்பது பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியரின் கீழ் 10 மாணவர்கள் ஒரு தலைப்பை ஒட்டி ஆய்வு செய்து கட்டுரைகள் சமர்ப்பிப்பது ஆகும். உதாரணமாகத் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் பாரதியார் ஆய்வு இருக்கை, பாரதிதாசன் ஆய்வு இருக்கை போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்கள் சார்பில் தமிழ் ஆய்விருக்கை அமைக்கப்படுகிறது. பல்கலைக்கழக மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவதற்காகவும் ஆய்வுகளின் இறுதியில் நல்லதொரு முடிவைக் கொண்டு வருவதற்காகவும் இப்படிப்பட்ட ஆய்வு இருக்கைகள் அமைக்கப்படுகின்றன.
இந்நிலையில் தமிழகத்திலேயே முதல் முறையாக திருவாரூர் மாவட்டம், தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் வரலாற்று ஆய்விருக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பள்ளியின் வரலாற்றுத் துறை ஆசிரியரும் ஆய்விருக்கை வழிகாட்டியுமான ஆதலையூர் சூரியகுமார் கூறியதாவது:
’’மாணவர்களிடம் பள்ளிப் பருவத்திலேயே ஆய்வுத் திறனை ஏற்படுத்துவதற்காக எங்கள் பள்ளியில் 'கரிகாலன் வரலாற்று ஆய்வு இருக்கை' அமைக்கப்பட்டுள்ளது.
கரிகால் சோழன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஒப்பற்ற ஆட்சி நடத்தியவன். நீர் வளம் பெருக்கியவன். கைத்தொழில் வளர்த்தவன், உலகத்திற்கே மிகச் சிறந்த நீர் மேலாண்மையை வழங்கியவன். இப்படி புகழ்பெற்ற கரிகால் சோழன் பற்றிய செய்திகளை வருங்காலத் தலைமுறையினர் அறிந்துகொள்வது பல வகையிலும் பயனுள்ளதாக இருக்கும். எனவே கரிகாலன் பற்றிய ஆய்வுகளை எங்கள் பள்ளி மாணவர்கள் 10 பேர் பத்து தலைப்புகளில் மேற்கொள்கிறார்கள்.
கரிகாலன் வரலாற்றைக் கூறும் நூல்கள், கல்லணையின் சிறப்புகள், கரிகாலனை அறிய உதவும் ஆதாரங்கள், கல்லணை, கரிகாலனின் கொடைத்தன்மை, கல்லணை வரைபடம், கரிகால் சோழனின் சமகாலத்தவர்கள், கரிகாலன் பெயர்க் காரணம், இலக்கியங்களில் கரிகாலன், நாங்கூர் கல்வெட்டு ஆகிய தலைப்புகளில் காயத்ரி, லாவண்யா, ஆசிகா, ஜெயந்தி, அட்சயா, தமயந்தி, சபியா சிரின், தீபிகா, கனிஷ்கர்,
லோகேஷ் குமார், ஆகிய மாணவர்கள் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.
கள ஆய்வுகள் நடக்குமா?
கள ஆய்வுகள் செய்யத் திட்டமிடவில்லை. வீட்டில் இருந்தபடியே பல்வேறு வரலாற்று நூல்களைப் படித்து, மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை எழுதுவர்.
இப்போது மாணவர்கள் ஆய்வு சுருக்கங்களை வழங்கி இருக்கிறார்கள். ஓராண்டு ஆய்வுக்குப் பிறகு முழுநீள ஆய்வுக் கட்டுரையை வழங்குவர். அந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 'கரிகாலன் கண்ட காவிரிக்கரை நாகரிகம்' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்படும். பள்ளியில் பயிலும்போதே மாணவர்கள் இதுபோன்ற ஆய்வுகளில் ஈடுபடுவது, பிற்காலத்தில் அவர்களது ஆராய்ச்சி சார்ந்த அறிவை மேம்படுத்தும்.
சேர, பாண்டியர் மற்றும் 11 வேளிர் குலத் தலைவர்களை வெண்ணிப் போரில் வென்றவன் கரிகாலன். அந்த வெண்ணிப் போர் நடந்த வெண்ணி நதிக்கரையில் இப்பள்ளி அமைந்திருப்பதால் கரிகாலன் ஆய்வு இருக்கையை தொடங்கியிருக்கிறோம்’’.
இவ்வாறு ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார் தெரிவித்தார்.
ஆய்வு இருக்கையில் இடம்பெற்று ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களை, பள்ளியின் தலைமை ஆசிரியரும் ஆய்வுக் குழுத் தலைவருமான ஐரன்பிரபா பாராட்டினார்.
ஆய்வை மேற்கொண்டு வரும் 7ஆம் வகுப்பைச் சேர்ந்த ஜெயந்தி கூறும்போது, ''இது எனக்கு புதுமையாக இருக்கிறது. வீட்டில் இரண்டு வருடங்கள் போரடித்து கிடந்தோம். இப்போது ஆராய்ச்சிக் கட்டுரை எழுதப் போகிறேன் என்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது. கரிகால் சோழ மன்னனைப் பற்றி படிக்கத் தொடங்கினேன். பிரமிப்பாக இருக்கிறது'' என்று தெரிவித்தார்.
கல்லூரி மாணவர்கள் பணியை நாங்கள் செய்யப் போகிறோம்
7ஆம் வகுப்பைச் சேர்ந்த லோகேஷ்குமார் கூறும்போது, ''கல்லூரி மாணவர்கள் செய்யும் பணியை நாங்கள் செய்யப் போகிறோம் என்பது பெருமையாக இருக்கிறது. ஆய்வுச் சுருக்கம் எழுதுவதற்காக கரிகாலன் பற்றிய சின்ன புத்தகம் படித்தேன். மிகவும் பிடித்திருந்தது. நிறையth தெரிந்து கொண்டேன். இதனை மற்ற மாணவர்களுக்கும் சொல்வேன்'' என்று தெரிவித்தார்.
6ஆம் வகுப்புப் படிக்கும் மாணவி சபியா சிரின் தெரிவிக்கும்போது, ''பத்து மாணவர்கள் சேர்ந்து கரிகாலன் சோழன் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று எங்கள் ஆசிரியர் சொன்னார். கரிகாலன் செய்த 'வெண்ணிப் போர்', எங்கள் பள்ளி இருக்கும் வெண்ணி நதிக்கரையில்தான் நடந்திருக்கிறது என்று தெரிந்து கொண்டபோது ஆச்சரியமாக இருந்தது. ஆராய்ச்சியில் இன்னும் ஆச்சரியமான செய்திகள் கிடைக்கும். ஆர்வத்துடன் இந்த ஆராய்ச்சியை செய்யப் போகிறோம்'' என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகள், இன்னும் பல முன்னெடுப்புகளுக்கு முன்னுதாரணமாகத் திகழட்டும்!