அனைத்துப் பள்ளிகளின் பாதுகாவலராக தமிழக முதலமைச்சர் செயல்படுகிறார் - அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்
மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 5 பேரும் ஒரே நேர்கோட்டில் பயணித்தால் தமிழகத்தில் கல்வியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் .
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள சாராள் டக்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் ஆணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த 422 பள்ளிகளுக்கான அங்கீகார ஆணையை வழங்கினார்.
இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறும்பொழுது, ’’கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மண்டலங்களைத் தொடர்ந்து நான்காவதாக நெல்லை மண்டலத்தில் இருக்கும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் கல்வியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகம் ஆகிய ஐந்து பேரும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த கூட்டங்களில் நான் பங்கேற்கும்போது கொடுக்கப்படும் மனுக்கள் அங்கேயே பிரித்து பார்த்து, படித்து அதற்கான தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அனைத்து பள்ளிகளின் பாதுகாவலர்
வரும் 31ஆம் தேதி கல்வித்துறை கூட்டம் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி தலைமையில் நடத்தப்பட உள்ளது. அப்போது பள்ளி நிர்வாகிகள், சங்கத்தினர் வைத்த கோரிக்கை தொடர்பான மனுக்கள் குறித்து ஆய்வு செய்து அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பரிசீலனை செய்யப்படும், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் பாதுகாவலராக தமிழக முதலமைச்சர் செயல்படுகிறார்.
தமிழக அரசு பொறுப்பேற்று 30 மாதங்களில் பள்ளிக் கல்வித்துறையில் 51 வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் நடக்கக்கூடிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தனியார் பள்ளிகளை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் வந்து பார்வையிட வேண்டும். அதேபோல தனியார் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் நடைமுறைகளை அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட வேண்டும். எங்களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள், உங்களிடமிருந்து நாங்கள் கற்றுக் கொள்கிறோம். அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் மட்டுமே புதிய சமுதாயத்தை படைக்க முடியும்.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்