TN School Text Books: தயார் நிலையில் 4.12 கோடி பாடப்புத்தகங்கள்; அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விநியோகம் எப்போது?
2023- 24ஆம் கல்வி ஆண்டில் வழங்க அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக 4.12 கோடி பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி முடிவடைந்துள்ளது.
2023- 24ஆம் கல்வி ஆண்டில் வழங்க அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக 4.12 கோடி பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி முடிவடைந்துள்ளது. இந்தப் புத்தகங்கள் விரைவில் பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அரசே விலையில்லாமல் பாடப் புத்தகங்களை வழங்கி வருகிறது. புத்தகங்களுடன் நோட்டுகள், எழுதுபொருட்கள், காலணி, சீருடை, காலை, மதிய உணவுகள் என மாணவர்களுக்குத் தேவையான அனைத்துமே விலையில்லாமல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு, வழங்கி வருகிறது.
இத்துடன் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் படிப்போருக்கான தமிழ் பாடப் புத்தகங்களை அச்சிட்டு, பாடநூல் கழகமே விற்பனை செய்து வருகிறது.
97 லட்சம் புத்தகங்கள்
தமிழ்நாட்டில் 1 முதல் 7ஆம் வகுப்பு வரை பருவ முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு, தேர்வுகள் நடைபெறும் நிலையில், 2023- 2024 ஆம் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் 7ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முதல் பருவப் பாடப் புத்தகங்கள் ஆரம்பகட்டத்தில் வழங்கப்படுகிறது. இதற்காக சுமார் 97 லட்சம் பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
என்னென்ன வகுப்புக்கு எவ்வளவு புத்தகங்கள்?
ஒன்றாம் வகுப்புக்கு 10 லட்சத்து 98 ஆயிரத்து 256 பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. 2ஆம் வகுப்புக்கு 10, 82, 671, 3ஆம் வகுப்புக்கு 10,98,000, 4ஆம் வகுப்புக்கு 11, 67,375, 5ஆம் வகுப்புக்கு 12,37 ,194 பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதேபோல 6ஆம் வகுப்புக்கு 22, 47,901, 7ஆம் வகுப்புக்கு 21,45,979 பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் முதல் பருவப் பாடப் புத்தகங்கள் ஆகும்.
அதேபோல, 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கும் பாட நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. குறிப்பாக 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 35,63, 103 பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. 9ஆம் வகுப்புக்கு 33, 78,295 புத்தகங்களும், 10ஆம் வகுப்புக்கு 35, 54,000 புத்தகங்களும், 11ஆம் வகுப்புக்கு 47,83, 555 புத்தகங்களும் அச்சிடப்பட்டுள்ளன. பிளஸ் 1 தொழில் பிரிவு மாணவர்களுக்காக 77,469 புத்தகங்களும், பிளஸ் 2 தொழில் பிரிவுக்கு 71, 239 புத்தகங்களும், பிளஸ் 2 பொதுப் பிரிவு மாணவர்களுக்கு 45, 13,000 பாடப் புத்தகங்களும் அச்சிடப்பட்டுள்ளன.
விற்பனைக்குக் காத்திருக்கும் புத்தகங்கள்
விலையில்லா பாடப் புத்தகங்கள் தவிர்த்து, 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மொத்தம் 1 கோடியே 12 லட்சத்து 30 ஆயிரம், புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அத்துடன் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தமிழ் மொழிப்பாடப்புத்தகங்கள் மொத்தம் 8 லட்சத்து 63 ஆயிரத்து 127 அச்சிடப்பட்டுள்ளன.
பள்ளி திறந்ததும் விநியோகம்
விலையில்லா பாடப்புத்தகங்கள் அனைத்தும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அடுத்த மாதம் அனுப்பி வைக்கப்பட உள்ளன. அவை பின்னர் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும்போது மாணவர்களுக்கு அவை விநியோகம் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.