Kalai Thiruvizha: வெளிநாட்டுச் சுற்றுலா, பரிசுகள்.. நாளை கடைசி; பள்ளி மாணவர்கள் கலைத் திருவிழாவுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களில் தர வரிசை அடிப்படையில் முதல் 20 மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலை சார்ந்த போட்டிகள், கலைத் திருவிழா என்ற பெயரில் நடத்தப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க நாளை (ஆக.28) கடைசித் தேதி ஆகும்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக, கலைத் திருவிழா அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் கலைத் திருவிழா விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 1 முதல் 12அம் வகுப்பு வரை கலைத்திருவிழா நடத்தப்படுகிறது.
என்ன பரிசு?
வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. மாநில அளவில் கலையரசன், கலையரசி என்ற பட்டத்தின்கீழ் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அதேபோல மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களில் தர வரிசை அடிப்படையில் முதல் 20 மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
இந்த ஆண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள், மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளப்படுத்துதல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் "சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு" என்ற மையக்கருத்தின் அடிப்படையில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
ஆக.28 வரை அவகாசம்
முதல்கட்டமாக பள்ளி அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 22 முதல் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. பங்கேற்பாளர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் உள்ளீடு செய்ய ஆக.28 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, வெற்றி பெற்றவர்களின் விவரங்களை செப்.3-க்குள் உள்ளீடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்தத் தேதி செப்டம்பர் 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பள்ளி அளவில் நடைபெற இருக்கும் கலைத்திருவிழா போட்டிகளில் ஒவ்வொரு மாணவரையும் ஏதாவதொரு போட்டிகளில் பங்கு பெறச் செய்யலாம். EMISல் மாணவர்களை உள்ளீடு செய்யக் கடைசி நாள்:28-08-2024 pic.twitter.com/l5RArtonjW
— Tamil Nadu School Education Department (@tnschoolsedu) August 27, 2024
கலைத்திருவிழா 2024-25 பிரிவுகள்
2024-25 ஆம் ஆண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள் பின்வருமாறு ஐந்து பிரிவுகளில் நடைபெறும்.
பிரிவு 1- 1 மற்றும் 2 ஆம் வகுப்பு
பிரிவு 2 - 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை
பிரிவு 3 - 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை
பிரிவு 4 - 9 மற்றும் 10 ஆம் வகுப்பு
பிரிவு 5 - 11 மற்றும் 12 ஆம் வகுப்பு