இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை- பள்ளிக் கல்வித்துறை பெருமிதம்

பள்ளிக் கல்வியின் முக்கியக் குறியீடுகளில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் இருப்பதாக UDISE+ 2025–26 (Unified District Information System for Education Plus) அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட UDISE+ 2025–26 அறிக்கையில், பள்ளிக் கல்வியின் பல்வேறு முக்கியக் குறியீடுகளில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி மாநிலமாகத் திகழ்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை, இடை நிற்றல் குறைவு, ஆசிரியர் எண்ணிக்கை, கல்வி உள்கட்டமைப்பின் பயனுள்ள பயன்பாடு மற்றும் பத்தாம் வகுப்பிற்குப் பிந்தைய கல்வித் தொடர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு தேசிய அளவில் சிறப்பான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.
உள்கட்டமைப்பு திறன்
UDISE+ 2025–26 அறிக்கையின்படி தமிழ்நாட்டில் 57,566 பள்ளிகள், 1,24,02,872 மாணவர்கள் மற்றும் 5,69,909 ஆசிரியர்கள் உள்ளனர். மாநிலத்தின் மாணவர்–ஆசிரியர் விகிதம் (PTR) 22:1 ஆக இருந்து, தேசிய சராசரியான 24:1-ஐ விட சிறப்பாக உள்ளது. மேலும், ஒரு பள்ளிக்கு சராசரியாக 215 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் இருப்பது கல்வி உள்கட்டமைப்பு திறமையாகப் பயன்படுத்தப்பட்டு வருவதை எடுத்துக்காட்டுகிறது.
மாணவர் இடை நிற்றல் விகிதத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளது. தொடக்கநிலை மற்றும் நடு நிலைப்பள்ளிகள் இடை நிற்றல் 0.0 சதவீதமாக பதிவாகியுள்ளது. இடைநிலைக் கல்வியில் இடை நிற்றல் விகிதம் 6.2 சதவீதம் மட்டுமே ஆகும். இது தேசிய சராசரியான 9.5 சதவீதத்தை விடக் குறிப்பிடத்தக்க அளவில் குறைவாகும்.
ஒட்டுமொத்த சேர்க்கை
மொத்த சேர்க்கை விகிதத்திலும் (Gross Enrolment Ratio - GER) தமிழ்நாடு தேசிய அளவில் முன்னணியில் உள்ளது. தொடக்கநிலையில் 92.2, நடு நிலைப்பள்ளிகள் 95.2, இடைநிலையில் 97.4, மேல்நிலையில் 85.1 எனப் பதிவாகியுள்ளது. குறிப்பாக இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வியில் தேசிய சராசரியை விட மிகவும் உயர்ந்த சேர்க்கை விகிதத்தை தமிழ்நாடு பெற்றுள்ளது.
பத்தாம் வகுப்பிற்குப் பிந்தைய கல்வித் தொடர்ச்சியிலும் மாநிலம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேல்நிலைக் கல்வியில் மாநிலத்தின் GER 85.1 ஆக உள்ளது. இதனுடன், 2025-26 கல்வியாண்டில் 83,600 மாணவர்கள் பாலிடெக்னிக் கல்வியிலும், 60,355 மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் சேர்ந்துள்ளனர்.
மொத்தமாக 1,43,955 மாணவர்கள் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இது மாணவர்களின் திறன், விருப்பம் மற்றும் வேலைவாய்ப்பு நோக்கங்களை கருத்தில் கொண்டு பல்வேறு கல்விப் பாதைகளை தமிழ்நாடு வெற்றிகரமாக உருவாக்கியிருப்பதை வெளிப்படுத்துகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்























