(Source: ECI/ABP News/ABP Majha)
TN Govt Schools: தமிழ்நாடு பள்ளிகளில் பிப்.13 முதல் 17 வரை இதைச் செய்யவேண்டும்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக ‘மல்லி’ என்னும் திரைப்படத்தை பிப்ரவரி 13 முதல் 17-ம் தேதி வரை திரையிட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக ‘மல்லி’ என்னும் திரைப்படத்தை பிப்ரவரி 13 முதல் 17-ம் தேதி வரை திரையிட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதுகுறித்துப் பள்ளிக் கல்வி ஆணையரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
’’அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் சிறார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதத்தில் ‘மல்லி’ என்ற தமிழ்த் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. 13 முதல் 17-ம் தேதி வரை திரையிடல் நடைபெறும்.
1999-ல் தேசிய திரைப்பட விருதுகளில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக சிறந்த படமாக மல்லி திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. இந்தப் படத்தை ஒளிபரப்புவதற்கான இணைப்பு, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மல்லி படத்தை மட்டுமே பள்ளிகள் திரையிட வேண்டும். அதற்கு மாற்றாக, வேறு படத்தைத் திரையிடக் கூடாது.
இதற்கான பொறுப்பு ஆசிரியர் படத்தைத் திரையிடும் முன் பார்த்துவிட்டு, கதைச் சுருக்கத்தைப் படித்து, படத்தின் பின்னணி குறித்து மாணவர்களுக்கு விளக்கிக் கூற வேண்டும். படம் தொடர்பான கட்டுரை ’தேன்சிட்டு’ இதழில் வந்துள்ளது. திரையிடல் தொடர்பான வழிமுறைகளைப் பின்பற்றி, தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இந்தப் படத்தை திரையிட்டுக் காண்பிக்க வேண்டும்’’.
இவ்வாறு பள்ளிக் கல்வி ஆணையரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி என்ன?
கல்வி என்பது வெறுமனே ஏட்டுக்கல்வி மட்டுமல்ல. பாடப் புத்தகங்களை படிப்பதோடு சேர்த்து வெவ்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்வதும்தான். கலை, பண்பாடு சார்ந்து கற்பித்தலும் கற்றலும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியம்.
மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்படும். இத்திரையிடலுக்கென தனியே பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் இதற்கென ஓர் ஆசிரியர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு அவருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். இந்த ஆசிரியர் மூலமாக 6 முதல் 9 வரை பயிற்றுவிக்கும் பிற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு சுழற்சி முறையில் இப்பொறுப்பு வழங்கப்படும்.
திரையிடுதலுக்குத் தேவையான உபகரணங்கள் பள்ளியில் இல்லாவிட்டால், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் வெளியிலிருந்து அவற்றை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். திரையிடுதலுக்கு முன்பாகவே பொறுப்பு ஆசிரியர் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு சிறார் திரைப்பட விழாவின் நோக்கங்கள் குறித்தும் திரையிடப்படும் படத்தின் முக்கியத்துவம் குறித்தும் அதன் கதை வெளிப்பட்டுவிடாமல் மாணவர்களிடம் ஓர் உரையாடல் நிகழ்த்தி படம் பார்ப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டுவார்கள். திரைப்படம் முடிந்தபின்னர், அது குறித்த கலந்துரையாடல் நிகழ்வும் வினாடி-வினா நிகழ்வும் நடத்தப்படும். பின்னூட்டக் கேள்வித்தாள் (Feedback Question Paper) வழங்கப்பட்டு அதன்மூலம் மாணவர்களின் கருத்துகள் அறியப்படும்.
5 மாணவர்களை இத்திரைப்படம் குறித்து 2-3 நிமிடங்களுக்குப் பேசவைக்கப்படுவார்கள். மாணவர்கள் திரைப்படம் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை எழுதி அளிக்கலாம் அல்லது வரைந்தும் அளிக்கலாம். ஏதேனும் ஒரு காட்சியை அல்லது உரையாடலை நடித்தும் இயக்கியும் காட்டலாம்.
திரைப்படம் குறித்த சிறந்த விமர்சனம் எழுதும் மாணவர்களின் கருத்துகள் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்படும் சிறார் இதழில் பிரசுரிக்கப்படும். மேலும் திரையிடப்பட்ட படத்திற்கு இரண்டாம் பாகம் என ஒன்று இருந்தால், அது எப்படி இருக்கக்கூடும் என்பதை குழந்தைகளை அவர்களின் கற்பனைகொண்டு எழுத வைக்கப்படுவார்கள்.