TNPSC: டி.என்.பி.எஸ்.சி. நேர்முகத் தேர்வில் கொண்டு வந்த திடீர் மாற்றம்.. இனி இப்படித்தான் தேர்வு நடக்கும்..
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அரசுப் பணியாளர்களை தேர்வு செய்யும் முறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வகையில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. சார்பில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. டி.என்.பி.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 1 தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பு ஆகும். கடந்த மாதம் 31 ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி -இன் புதிய தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திர பாபு நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அரசுப் பணியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் பல ஆண்டுகாலமாக நடைபெற்று வருகிறது. ஆனால் தொடர்பான நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் விதமாக அதன் நடைமுறைகளில் தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தில் நடத்தப்படும் மூன்றாம் கட்ட தேர்வான நேர்முகத் தேர்விற்கான புதிய நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வுக்கு தேர்வானவர்களின் பெயர், புகைப்படம் மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்கள் இனி தேர்வு நடத்தும் அதிகாரிகளுக்கு வழங்கப்படாது. அதற்கு பதிலாக தேர்வாளர்கள் அனைவரும் ஏ.பி.சி.டி போன்ற முதலான எழுத்துக்கள் மூலம் குறியீடு செய்யப்பட்டு தேர்வு செய்யும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும்.
இந்த புதிய நடைமுறைகளுடன் ஏற்கனவே உள்ள random shuffling முறையும் சேர்த்து பின்பற்றப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருவதால் விண்ணப்பதாரர்கள் மீது சார்புத்தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நீக்கப்படுவதுடன் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான செய்தி வெளியீட்டுக் குறிப்பில், “பொது ஆட்சேர்ப்பில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு உறுதி செய்வதற்கான அமைப்புகளைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கும் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கும் டி.என்.பி.சி -இன் கொள்கையின்படி, தேர்வாணையம் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், பிறந்த தேதி போன்ற அடையாளத்தை மறைக்க முடிவு செய்துள்ளது. வாய்வழித் தேர்வுக்குத் தோற்றுவதோடு, விண்ணப்பதாரர்கள் A,B,C,D போன்ற எழுத்துக்களின் பெயர்கள் மூலம் நேர்காணல் வாரியங்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவார்கள். இந்த புதிய வெளியீடு ஏற்கனவே இருக்கும் வாய்வழித் தேர்வு ரேண்டம் ஷஃபிளிங் நடைமுறையுடன் சேர்ந்து, வேட்பாளர்களின் பெயர் தெரியாததை உறுதி செய்யும். இது நேர்முகத் தேர்வின் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
சீமான் வழக்கில் திடீரென புகாரை வாபஸ் வாங்கிய விஜயலட்சுமி.. இரவோடு இரவாக புகாரை வாபஸ் பெற்றது ஏன்..?
கருத்து சுதந்திரம் என்றால் என்ன? நீதிமன்றத்தில் வகுப்பெடுத்த இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்