TN Policy Note: குறைவான மாணவர்கொண்ட பாடப்பிரிவுகள் நீக்கம்; படிக்கும்போதே வருமானம்- உயர் கல்வித்துறை அறிவிப்புகள் என்ன?
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டு புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல அறிவிப்புகளை உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டு புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்படும்; படிக்கும்போதே வருமானம் ஈட்டும் வகையில் புதிய பட்டயப் படிப்புகள் கொண்டுவரப்படும் உள்ளிட்ட பல அறிவிப்புகளை உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர் கல்வித்துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நேற்று நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
* அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் நிறுவன வளத்திட்டமிடலுடன் ஒருங்கிணைக்கப்பட்ட கற்றல் மேலாண்மை அமைப்பு மென்பொருள் ரூ.150.00 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
* 5 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழிலகங்களின் தேவைகளுக்கேற்ப புதிய தொழிலிடைக் கல்வி பட்டயப் படிப்புகள் அறிமுகம் செய்யப்படும்.
* அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகளிலும் மேம்படுத்தப்பட்ட உற்பத்திக்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்.
* 7 அரசு பொறியியல் கல்லூரிகள்மற்றும் 31 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு 1 ஜிபிபிஎஸ் அளவிலான தொடர் இணையதள வசதி ஏற்படுத்தப்படும்.
* மாற்றுத்திறனாளி மாணாக்கர்களின் நலனுக்காக சென்னை, மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய திறன் பயிற்சி மையம் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* கோயம்புத்தூர் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அரசு மகளிர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் மின்சார வாகன இயக்க மையம் நிறுவப்படும்.
* “நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் அனைத்து பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளிலும், கட்டமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். (Introduction of Curriculum structure under “Naan Mudhalvan” Scheme in allPolytechnic Colleges)
* அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் புதிதாக தொடங்கப்பட்ட பாடப்பிரிவுகளுக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.
* 3 அரசு பலவகை தொழில்நுட்பக்கல்லூரிகளில் மாணாக்கர்கள் கல்வி பயிலும்பொழுதே வருமானம் ஈட்டும் பட்டயப்படிப்பு அறிமுகப்படுத்தப்படும்.
* 5 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை வணிக மேலாண்மை பட்டப் படிப்பும் (எம்பிஏ), அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை கணினி (MCA) பட்டப் படிப்பும் தொடங்கப்படும்.
* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் நாப்கின் எரிப்பான் இயந்திரம் வழங்கப்படும். ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் நாப்கின் வழங்கும் இயந்திரமும் ரூ.1.26 கோடியில் நாப்கின் எரியூட்டி எந்திரங்களும் அமைக்கப்படும்.
* 2012-13 ஆம் ஆண்டு மற்றும் 2022-23 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 5 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு புதிய கட்டடங்கள் ரூ.68.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
* பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அரசு கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.180.00 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.