TN MBBS Admission | எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது?- முழு விவரம்
நேரடிக் கலந்தாய்வு மட்டுமே நடைபெற உள்ளது. கலந்தாய்வு மையத்துக்குள் செல்போனைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் நேற்று (டிச.19) முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்துக் காணலாம்.
தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட மாநிலம் முழுவதும் மொத்தம் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15% இடங்களும் மாநில ஒதுக்கீட்டுக்கு 85% இடங்களும் ஒதுக்கப்படுகின்றன. இதில் தமிழகத்திற்கு 6958 எம்பிபிஎஸ் மற்றும் 1925 பிடிஎஸ் என மொத்தம் 8,883 இடங்கள் உள்ளன.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சிறுபான்மை அல்லாத நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டுக்கு 65% இடங்களும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 35% இடங்களும் ஒதுக்கப்படுகின்றன. சிறுபான்மை நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டுக்கு 50% இடங்களும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 50% இடங்களும் ஒதுக்கப்படுகின்றன.
இதற்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை, ஆண்டுதோறும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது. இதற்கிடையே எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2021-22 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது நேற்று முதல் தொடங்கியது.
இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கு ரூ.500, நிர்வாக ஒதுக்கீட்டு இடத்துக்கு ரூ.1,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான தரவரிசை ஒட்டுமொத்த இணையதளத்தில் பின்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடிக் கலந்தாய்வு மட்டுமே நடைபெற உள்ளது. கலந்தாய்வு மையத்துக்குள் செல்போனைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்களும் பெற்றோர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம். மருத்துவக் கல்லூரியில் சேரும் முன், முதலாமாண்டு மாணவர்கள் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
ராகிங் எச்சரிக்கை
மருத்துவ மாணவர்கள் போராட்டம்/ ராகிங் உள்ளிட்ட செயல்களில் கல்லூரிக்கு உள்ளேயும் வெளியேயும் ஈடுபடக் கூடாது. அவ்வாறு ஈடுபடுபவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கப்படுவார்கள். சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.
மாணவர்கள் ஆன்லைனில் https://ugreg.tnmedicalonline.co.in/ என்ற இணையதளத்தில் ஜனவரி 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
விண்ணப்பிக்கும்போது கீழே குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களைக் கட்டாயம் இணைக்க வேண்டும்.
* நீட் (இளங்கலை) தேர்வு 2021 ஹால்டிக்கெட், மதிப்பெண் அட்டை
* 10, 11, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் (இரு பக்கமும்)
* மாற்றுச் சான்றிதழ்
* 6- 12ஆம் வகுப்பு வரை படித்த படிப்புக்கான சான்றிதழ்
* இருப்பிடச் சான்றிதழ் (தேவைப்பட்டால்)
* மொழிவாரி சிறுபான்மையினர் சான்றிதழ் (தேவைப்பட்டால்)
* சாதிச் சான்றிதழ் (தேவைப்பட்டால்)
* மாநில வாரியம் தவிர்த்த பிற மாணவர்கள் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இருந்து தகுதிச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.
ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பிய பிறகு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, புகைப்படங்கள் மற்றும் மேலே குறிப்பிட்ட சான்றிதழ்களை இணைத்து ஏ4 அளவு கவரில் போட்டுக்கொள்ள வேண்டும்.
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள், தங்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி / பல் மருத்துவக் கல்லூரி / டிஎஃப்சி மையங்களை இன்று (டிச.20) முதல் ஜனவரி 7-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். .
தகுந்த ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பத்தை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ,
’செயலாளர், தேர்வுக் குழு,
மருத்துவக் கல்வி இயக்ககம்,
162, ஈவெரா நெடுஞ்சாலை,
கீழ்ப்பாக்கம், சென்னை-600010’
என்ற முகவரியில் வரும் ஜனவரி 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இதுகுறித்த முழுமையான தகவல்களுக்கு https://tnmedicalselection.net/news/19122021230942.pdf என்ற தொகுப்பேட்டைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.
கூடுதல் தகவல்களுக்கு 044-28364822, 9884224648, 9884224649, 9884224745, 9884224746 ஆகிய உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.