தமிழ் புதல்வன் திட்டத்திற்கு ரூ.401 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ் புதல்வன் திட்டத்தை செயல்படுத்த மாநில அளவிலான குழு, மாநில அளவிலான மேற்பார்வையாளர் குழு அமைத்து - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ் புதல்வன் திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது 2024-2025ம் நிதியாண்டு முதல் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு "புதுமைப் பெண் திட்டம்" போன்று மாதந்தோறும் ரூ.1,000/- உதவித் தொகை வழங்கும் "தமிழ்ப் புதல்வன் திட்டம்" செயல்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ் புதல்வன் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள்
தமிழ்நாட்டில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் முழுமையாக பயனடைவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்படும். மேலும், ஊக்கத் தொகை மாணவர்களின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்த பின்னரும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
வருமான உச்ச வரம்பு இனம் மற்றும் ஒதுக்கீடு ஆகிய எந்தவொரு பாகுபாடும் இன்றி, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள், தமிழகத்தில் உள்ள எவ்வித கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயிலும் மாணவராக இருத்தல் வேண்டும்.
தமிழ் புதல்வன் திட்டத்திற்கு ரூ.401 கோடி நிதி ஒதுக்கீடு
மேலும், மாணவர் பயிலும் நிறுவனம் மற்றும் பாடப்பிரிவு அரசால் அங்கீகரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். அரசுப் பள்ளிகளிலும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் 8 ஆம் வகுப்பு அல்லது 9 ஆம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு வரை பயின்று தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைய தகுதி உடையவர்கள் ஆகிறார்கள் .
தமிழ்நாடு அரசு தொலைதூர / அஞ்சல் வழியிலும், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையை பெற இயலாது.
பிற மாநிலங்களில் மத்திய அரசின் கீழ் செயல்படும் IIT, NIT. IISER போன்ற தகைசால் கல்வி நிறுவனங்களில் பயிலும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவர்களும் இத்திட்டத்தில் பயன்பெறுவர். இவர்கள் மாநில திட்ட மேலாண்மை அலகின் மூலமாக அணுகலாம்.
தமிழ்ப் புதல்வன்" திட்டத்திற்காக விண்ணப்பிக்கும் அனைவரும் ஊக்கத்தொகையைப் பெற இந்த திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக தகவல் முகமையினை (Portal) அவர்கள் உயர்கல்வியைத் தொடரும் கல்வி நிறுவனம் மூலமாக நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
அரசுக்கும், மாணவர்களுக்கும் இடையே இடைத்தரகர்களை களைவதற்கும் ஊக்கத்தொகையை மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துவதற்கும் இந்த இணையதளம் மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட வேண்டும்.
தமிழ் புதல்வன் திட்டத்திற்கு ரூ 401 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மேலும், தமிழ் புதல்வன் திட்டத்தை செயல்படுத்த மாநில அளவிலான குழு, மாநில அளவிலான மேற்பார்வையாளர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.