TN budget 2023: ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை: முழு விவரம்
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் முதன்மைத் தேர்வுக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் முதன்மைத் தேர்வுக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதனிடையே இந்தாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து 2023-24 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இதில் குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகும், தேர்ந்தெடுக்கப்பட 1000 மாணவர்களின் முதல்நிலைத் தேர்வுக்கு ரூ.7,500 தொகை வழங்கப்படும் . அதேபோல முதன்மைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இதற்கென ஆண்டுக்கு 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
பிற அறிவிப்புகள்
மாறி வரும் தொழில் சூழலுக்கு தேவைப்படும் மனிதவளத்தை உருவாக்க, 2,877 கோடி ரூபாய் செலவில் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தலைசிறந்த திறன் மையங்களாக மாற்றும் திட்டம் நடைபெற்று வருகிறது. வரும் கல்வி ஆண்டிலேயே இப்பணிகள் முடிக்கப்பட்டு புதிய பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
தொழில் துறையினருடன் இணைந்து தொழில்துறை 4.0 தரத்திற்கு ஏற்ப அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரிகளை திறன்மிகு மையங்களாக மாற்றும் திட்டத்தை வரும் ஆண்டில் அரசு தொடங்கும். இந்தத் திட்டத்தில் 54 அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரிகள் 2783 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'திறன்மிகு மையங்களாக தரம் உயர்த்தப்படும்.
தொழில் பயிற்சி நிறுவனங்களிலும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த திறன் பயிற்சியை வழங்குதல், திறமையான பணியாளர்களை உருவாக்குதல் போன்ற நோக்கங்களுடன், 120 கோடி ரூபாய் செலவில் சென்னை அம்பத்தூரில் 'தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையம் ((TN-WISH) அமைக்கப்படும். இந்த மையத்தில், இயந்திர மின்னணுவியல் (Mechatronics), இணைய வழிச் செயல்பாடு (Internet of things) அதிநவீன வாகனத் தொழில்நுட்பம் (Advanced Automobile Technology), துல்லியப் பொறியியல் (Precision Engineering) மற்றும் உயர்தர வெல்டிங் (Advanced Welding) போன்ற தொழில்நுட்பங்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும்.
நான் முதல்வன் திட்டம் அனைத்து பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் முன்னணித் தொழில் நிறுவனங்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது. வேலை வாய்ப்புகளை மேம்படுத்த தொழில்துறைக்குத் தேவையான பயிற்சித் திட்டங்களை உள்ளடக்கி கல்விப் பாடத்திட்டங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் மொத்தமாக சுமார் 12.7 இலட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
12,582 பொறியியல் ஆசிரியர்களுக்கும், 7,797 கலை மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு வரவு- செலவுத் திட்டத்தில் 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திறன் பயிற்சி கட்டமைப்பைப் பெருமளவில் அதிகரிக்க, தற்போதுள்ள தொழிற்சாலைகள் தொழிற்பயிற்சிக் கூடங்களாகப் பயன்படுத்தப்படும். இளைஞர்களுக்கு தொழிற்சாலைகளிலேயே பயிற்சி அளித்திட தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். தொழிற்சாலைகளில் திறன் பள்ளிகள் (Factory Skill Schools) என்ற இத்திட்டத்திற்கு இந்த ஆண்டில், 25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மூன்றாவது பெரும் தொழில் தொகுப்பாக உருவெடுத்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி சிப்காட் தொழில் பூங்காவில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் நிறுவப்படும்.
பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் அரசு கல்லூரிகளில் கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் 1,000 கோடி ரூபாய் செலவில் ஐந்தாண்டுகளில் மேம்படுத்தப்படவுள்ளன. நடப்பாண்டில் 26 பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், 55 கலை மற்றும்
அறிவியல் கல்லூரிகளில் புதிய வகுப்பறைகள், கூடுதல் ஆய்வகங்கள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகள் வரும் நிதியாண்டிலும் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
இதையும் வாசிக்கலாம்: TN Budget 2023 LIVE: தமிழ்நாடு பட்ஜெட்டில், பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 40, 299 கோடி நிதி ஒதுக்கீடு- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்