TN 12th Result 2024: 600க்கு 596 மார்க், 4 பாடங்களில் நூற்றுக்கு நூறு - கரூரில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பலர் வாழ்த்து
நல்ல மதிப்பெண்கள் பெற முடியாத மாணவர்கள் மனம் தளராமல், தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கரூரில் பிளஸ் டூ தேர்வில் 596 மதிப்பெண்களும், 4 பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 7 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் மாதத்தில் நிறைவுபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் காலை 9.30 மணி அளவில் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை, குறுஞ்செய்தி வாயிலாகவும், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணைய தளத்திலும் தெரிந்து கொண்டனர். கரூர் மாவட்டமானது +2 தேர்வில் 95.90 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 12-வது இடம் பெற்றுள்ளது.
குறிப்பாக கரூர் வெண்ணைமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவி ஹரிணி 600 மதிப்பெண்களுக்கு 596 மதிப்பெண் பெற்று 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளார். மேலும் வணிகவியல், பொருளியல், கணக்கியல், வணிக கணிதம் ஆகிய நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
கரூர் நகரில் வசிக்கும் கணேசன் சரோஜா ஆகியோரின் மகளான ஹரிணி பிளஸ் டூ தேர்வில் சிறப்பிடம் பெற்றதற்காக மாணவி பயின்ற பள்ளியின் தாளாளர், முதல்வர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். ப்ளஸ் டூ தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவி ஹரிணி, தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவதற்கு தனக்கு ஊக்கமளித்த தனது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பலருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், நல்ல மதிப்பெண்கள் பெற முடியாத மாணவர்கள் மனம் தளராமல், தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.