TN 11th 12th Hall Ticket: பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிப்.20 முதல் ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
Tamil Nadu 11th 12th Hall Ticket 2024: பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை மாணவர்கள் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் பெறலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மார்ச் 1ஆம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை மாணவர்கள் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் பெறலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. மார்ச் 1ஆம் தேதி தமிழ் மொழி பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. மார்ச் 5ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத் தேர்வு நடைபெறுகிறது. தொடர்ந்து மார்ச் 8ஆம் தேதி பல்வேறு வகையான பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன.
தொடர்ந்து மார்ச் 11ஆம் தேதி வேதியியல், கணக்கியல், நிலவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. அதேபோல மார்ச் 15ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம், வேலை வாய்ப்பு திறன்கள் ஆகிய பாடங்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாட வாரியாகத் தேர்வுகள்
கணிதம், விலங்கியல், வர்த்தகம், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் (பொது) ஆகிய பாடத்தின் பொதுத் தேர்வுகள் மார்ச் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ளன.
தொடர்ந்து உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் பொறியியல், அடிப்படை சிவில் பொறியியல், அடிப்படை ஆட்டோமொபைல் பொறியியல், அடிப்படை மெக்கானிக்கல் பொறியியல், டெக்ஸ்டைல் டெக்னாலஜி அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் 22ஆம் தேதி நடைபெற உள்ளன.
இந்த நிலையில், இவர்களுக்கான ஹால் டிக்கெட் பிப்.20 அன்று வெளியாக உள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் புதுச்சேரி இணை இயக்குநர் (கல்வி)-க்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
நடைபெறவுள்ள மார்ச் - 2024 மேல்நிலை பொதுத் தோவிற்கு, பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களது தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுக்களை மேல்நிலை இரண்டாம் ஆண்டிற்கு 20.02.2024 அன்று பிற்பகல் முதலும், மேல்நிலை முதலாமாண்டிற்கு 21.02.2024 அன்று பிற்பகல் முதலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?
* மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
* Online Portal என்ற வாசகத்தினை “Click” செய்தால் “HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR EXAM MARCH - 2024” என்ற பக்கம் தோன்றும்.
* அதில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் ஐடி, கடவுச்சொல் ஆகியவற்றைக் கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகளுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் தவறாமல் பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.