TN 11th 12th Hall Ticket: பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு; மாணவர்களுக்கு பிப்.17 முதல் ஹால் டிக்கெட்- பெறுவது எப்படி?
TN 11th 12th Hall Ticket Download 2025: 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் பிப்ரவரி 17 முதல் வெளியிடப்பட உள்ளது.

மார்ச் மாதம் நடைபெற உள்ள, மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளை எழுதும் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை (ஹால் டிக்கெட்) பிப்ரவரி 17 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் ந.லதா அறிவித்துள்ளார். இதற்கான அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
நடைபெறவுள்ள மார்ச் - 2025 மேல்நிலை பொதுத் தேர்விற்கு, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை, மேல்நிலை இரண்டாம் ஆண்டிற்கு 17.02.2025 அன்று பிற்பகல் முதலும், மேல்நிலை முதலாம் ஆண்டிற்கு 19.02.2025 அன்று பிற்பகல் முதலும் பெறலாம்.
ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?
மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும். அதில், "online- portal" என்ற வாசகத்தினை க்ளிக் செய்யவும்,
அதில், "HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR EXAM MARCH - 2025" எனத் தோன்றும் பக்கத்தில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள யூசர் பெயர், Password-ஐக் கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது குறித்த விவரத்தினை முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் தவறாமல் பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தேர்வு அட்டவணை என்ன?
மார்ச் - 2025, மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கால அட்டவணைகளை (TIME TABLE) www.dge.tn.gov.in என்ற இணைய தளத்திற்குச் சென்று அறிந்து கொள்ளலாம்.
குறிப்பாக, https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1729853324.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 3ஆம் தேதி தமிழ் மொழிப் பாடத்துடன் தேர்வு தொடங்குகிறது. மார்ச் 25ஆம் தேதியோடு தேர்வு முடிகிறது. அதேபோல 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 5ஆம் தேதி தொடங்கி, 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: www.dge.tn.gov.in