Tamil Nadu 10th Result 2024: போடு..! வெளியானது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - 91.55 %பேர் தேர்ச்சி
Tamil Nadu 10th Result 2024 Declared: கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் 0.16 சதவிகிதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Tamil Nadu 10th Result 2024 Declared: தமிழ்நாடு அரசின் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு:
தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, தேர்வு எழுதிய 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுதிய மாணவர்களில் 91.55 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 மாணவிகள் மற்றும் 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 என மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல மாணவர்களை விட, மாணவிகளே அதிகம் தேர்ச்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி மாணவிகள் 94.53% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.58% அளவிற்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவதுமாணவிகளை விட மாணவர்கள் 5.95 சதவிகிதம் தேர்ச்சியில் பின்தங்கியுள்ளனர். கடந்த ஆண்டு 10ம் வகுப்புபொதுத்தேர்வில் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று இருந்த நிலையில், நடப்பாண்டில் 91.55 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் 0.16 % கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சதமடித்த மாணவர்கள் விவரம்:
12 ஆயிரத்து 625 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில், நான்காயிரத்து 105 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் ஆயிரத்து 364 அரசுப்பளிகளும் அடங்கும். தமிழில் 8 பேரும், ஆங்கிலத்தில் 415 பேரும், கணிதத்தில் 20 ஆயிரத்து 691 பேரும், அறிவியலில் ஐயாயிரத்து 104 பேரும் மற்றும் சமூக அறிவியலில் நான்காயிரத்து 428 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை எடுத்துள்ளனர்.
பாடவாரியான தேர்ச்சி விகிதம்:
தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களில் 96.85 சதவிகிதம் பேரும், ஆங்கிலத்தில் 99.15 சதவிகிதம் பேரும், கணிதத்தில் 96.78 சதவிகிதம் பேரும், அறிவியலில்96.72 சதவிகிதம் பேரும் மற்றும் சமூக அறிவியலில் 95.74 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.31 சதவிகித தேர்ச்சி விகிதத்துடன் அரியலூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து சிவகங்கை (97.02%) மற்றும் ராமநாதபுரம் (96.36%) ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. வேலூர் மாவட்டம் 82.07% தேர்ச்சியுடன் மாவட்ட அளவில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்
அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணாக்கர்கள் 87.90 சதவிகிதமும், அரசு உதவிப்பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணாக்கர்கள் 91.77 சதவிகிதமும், தனியார் சுயநிதிப் பள்ளிகளை சேர்ந்த மாணாக்கர்கள் 97.43 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருபாலர் பள்ளிகள் 91.93 சதவிகிதமும், பெண்கள் பள்ளிகள் 93.80 சதவிகிதமும், ஆண்கள் பள்ளிகள் 83.17 சதவிகிதமும் தேர்ச்சியை பதிவு செய்துள்ளன.
துணத்தேர்வுகள் எப்போது?
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் உடனடியாக துணைத்தேர்வை எழுத, நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுன் 2ம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறுன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, புதுச்சேரியில் நடைபெற்ற நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 89.14 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.