Mahavishnu: சர்ச்சை சொற்பொழிவு; அசோக் நகர், சைதாப்பேட்டை அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் அதிரடி பணியிட மாற்றம்
பிற்போக்குத் தனமான கருத்துகளைக் கொண்ட விருந்தினரை அழைத்து வந்து பேச வைத்தமைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தன்னம்பிக்கை சொற்பொழிவு, பிற்போக்குத்தனமான கருத்துகளுக்கு வித்திட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், அசோக் நகர் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை அதிரடியாக திருவள்ளூர் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பிற்போக்குத் தனமான கருத்துகளைக் கொண்ட விருந்தினரை அழைத்து வந்து பேச வைத்தமைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் நிகழ்ச்சி என்ற பெயரில் மகா விஷ்ணு என்னும் பேச்சாளர் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
மாணவிகள் அழகாக இல்லாததற்கு என்ன காரணம்?
அவர், மாணவிகள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவிகளில் செய்த பாவம்தான் காரணம். மாற்றுத் திறனாளிகளாகப் பிறக்கவும் அதுவே காரணம் என்று பேசி இருந்தார். மறு பிறவி, பாவம், புண்ணியம், பிரபஞ்ச சக்தி பூமியில் இறங்கும் என்றெல்லாம் மகா விஷ்ணு கூறி இருந்தார். இந்தக் கருத்துகள் வைரலான நிலையில், இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நீண்ட விளக்கம் அளித்திருந்தார்.
இதையும் வாசிக்கலாம்: 'அரசுப்பள்ளி மாணவிகளின் சிந்தனையை மழுங்கடிப்பதா?- மூட நம்பிக்கைப் பேச்சாளரைக் கைது செய்க'- எழும் கோரிக்கை
சம்பந்தப்பட்டவர்கள் மீதும் தவறு இழைத்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்திருந்தார்.
இதையும் வாசிக்கலாம்: Minister Anbil Mahesh: என் ஏரியாவுக்கு வந்து, என் துறை ஆசிரியரை அவமதிப்பதா? சும்மா விடமாட்டேன்- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்
தொடர்ந்து அசோக் நகர் மேல்நிலைப் பள்ளியில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது அசோக் நகர் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், கோவில் பதாகை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அதேபோல சைதாப்பேட்டை மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரம், செங்கல்பட்டு மாவட்டம் அணைக்கட்டு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.