Minister Anbil Mahesh: என் ஏரியாவுக்கு வந்து, என் துறை ஆசிரியரை அவமதிப்பதா? சும்மா விடமாட்டேன்- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்
என் ஏரியாவுக்குள் வந்து என் துறை ஆசிரியரை அவமரியாதை செய்தவரை சும்மா விடமாட்டேன் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் நிகழ்ச்சி என்ற பெயரில் மகா விஷ்ணு என்னும் பேச்சாளர் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
மூட நம்பிக்கை அகங்காரப் பேச்சு
அவர், மாணவிகள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவிகளில் செய்த பாவம்தான் காரணம், மாற்றுத் திறனாளிகளாகப் பிறக்கவும் அதுவே காரணம் என்று பேசியுள்ளார். மறு பிறவி, பாவம், புண்ணியம், பிரபஞ்ச சக்தி பூமியில் இறங்கும் என்றெல்லாம் மகா விஷ்ணு கூறி இருந்தார். இதை எதிர்த்துக் கேள்வி கேட்ட பார்வைக் குறைபாடு கொண்ட ஆசிரியர் சங்கர் என்பவரிடம் அகங்காரத்துடன் பேசினார். இதுதொடர்பான வீடியோக்கள் இனையத்தில் வைரலாகின.
இந்த நிலையில், என் துறை ஆசிரியரை அவமரியாதை செய்தவரை சும்மா விடமாட்டேன் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
’’நானும் அரசுப் பள்ளியில் படித்து வந்தவன்தான். என் துறை தமிழ் ஆசிரியர் சங்கரைத் தவறாகப் பேசிய மகா விஷ்ணுவை சும்மா விட மாட்டேன். பிற்போக்குத் தனமாக பேசிய மகா விஷ்ணுவை, ஆசிரியர் சங்கர் கேள்வி கேட்டது பெருமையாக உள்ளது. கண் பார்வை இல்லாதபோதும் கல்வி அறிவு கொண்டு கேள்வி எழுப்பி இருந்தார்.
மகா விஷ்ணு மீது காவல் துறையில் புகார்
’மறப்போம் மன்னிப்போம்’ என்று ஆசிரியர் சங்கர் தெரிவித்துள்ளார். ஆனாலும் எங்கள் சார்பில், பள்ளியில் மூட நம்பிக்கை கருத்துகளைப் பேசிய மகா விஷ்ணு மீது காவல் துறையில் புகார் அளிக்கப்படும்.
அரசுப் பள்ளிகளை யார் குறை கூறினாலும் அதை ஏற்க முடியாது. துறை அமைச்சராக அதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன்.
இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாது
பள்ளிகள்தான் பகுத்தறிவை விதைக்கும் இடம். பிற்போக்கு சிந்தனையை கேள்வி கேட்டது தமிழ்தான். பிற்போக்கான சிந்தனைகளை விதைப்பதை ஒருபோதும் ஏற்கக்கூடாது. யார் எதை சொன்னாலும் அதை மாணவர்கள் பகுத்தறிந்து செயல்படுத்த வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
சர்ச்சைக்குரிய சொற்பொழிவுக்கு காரணமானவர்கள் மீது 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். சொற்பொழிவு தொடர்பாக அனைத்து ஆசிரியர்களையும் வரவழைத்து விசாரிக்க இருக்கிறோம். சர்ச்சைக்குரிய சொற்பொழிவு குறித்து எல்லோருக்கும் ஏற்பட்ட உணர்வுதான், முதல்வருக்கும் எனக்கும் ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் ஒரு பாடம்
எடுக்கக்கூடிய நடவடிக்கை ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கும். யார் எதைப் பேசினாலும் அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அறிவு சார்ந்தவர்களை நாம் பள்ளிகளுக்கு அழைத்து வர வேண்டும். சிறப்பு விருந்தினர் யார் என்பதை தெரிந்துகொண்டு சிறப்பு விருந்தினராக அழைத்து வரவேண்டும்.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.