Social Justice Song: இனி தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மட்டுமல்ல; சமூக நீதி பாடலும்: அரசுப் பள்ளிகளுக்கு புது உத்தரவு
அரசுப் பள்ளிகளின் காலை வணக்க நிகழ்வில் "சமூக நீதி" பாடல் பாடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
இனிவரும் காலங்களில் "சமூக நீதி" பாடல் அரசுப் பள்ளிகளின் காலை வணக்க நிகழ்வில் பாடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் பயின்று இன்று உலகெங்கும் பல்வேறு துறைகளில் பல நாடுகளில் பணியிலிருக்கும் முன்னாள் அரசுப் பள்ளி மாணவர்களை ‘’விழுதுகள்’’ என்கிற பெயரில் ஒருங்கிணைக்கும் முன்னெடுப்பை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த முயற்சியின் பலனாக 34,381 பள்ளிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 7 லட்சம் முன்னாள் மாணவர்கள் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையோடு ஆர்வத்துடன் பதிவு செய்து தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த முன்னாள் மாணவர்களில் 4 லட்சம் முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்த உதவிகள் செய்ய முன்வந்துள்ளனர். இரண்டு லட்சம் பேர் தன்னார்வலர்களாக செயலாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர். 96 நாடுகளைச் சேர்ந்த 2,557 மாணவர்கள் தங்கள் பள்ளிகளோடு மீண்டும் தங்களை இணைத்துக்கொண்டு தான் படித்த பள்ளிகளின் முன்னேற்றத்தில் பங்கேற்க உறுதி பூண்டுள்ளனர்.
இதற்கான தொடக்க விழாவையும் முன்னாள் மாணவர்கள் அமைப்பிற்கான இலச்சினை வெளியீடும் சென்னை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
குறுந்தகடு வெளியீடு
இவ்விழாவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலினும், அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். "விழுதுகள்" நிகழ்வைத் தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை சார்பில் உருவாக்கப்பட்ட "சமூகநீதி" உள்ளிட்ட பொருண்மைகள் சார்ந்த 10 பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை வெளியிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் உதயநிதி, "இந்த 10 பாடல்கள் தொகுப்பில் சமூக நீதியை வலியுறுத்தும் பாடலை அசெம்பிளி நேரத்தில் பாடிவிட்டு வகுப்புக்குச் செல்ல வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
அனைத்துப் பள்ளிகளுக்கும் விரைவில் சுற்றறிக்கை
’’சமூக நீதிக் கொள்கையை எப்போதும் அழுத்தமாக வலியுறுத்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இனிவரும் காலங்களில் "சமூகநீதி" பாடல் அரசுப் பள்ளிகளின் காலை வணக்க நிகழ்வில் பாடப்படும் என அன்போடு தெரிவித்துக் கொள்கின்றோம். இதற்கான செயல்முறைகள் குறித்த சுற்றறிக்கை விரைவில் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்படும்!’’ என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
முன்னதாக விழுதுகள் திட்ட தொடக்க விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ’’தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் #நம்_பள்ளி_நம்_பெருமை என்ற முழக்கத்தோடு அரசுப் பள்ளிகளை மேம்படுத்த, முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் ‘விழுதுகள்’ முன்னெடுப்பின் தொடக்க விழாவில் சென்னையில் இன்று பங்கேற்றேன்.
முதல்வரின் வாழ்த்துரையோடு தொடங்கப்பட்டுள்ள ‘விழுதுகள்’ பள்ளிக் கல்வித்துறையின் சிறப்புக்குரிய முன்னெடுப்புகளில் ஒன்றாக மிளிர்கிறது. பள்ளிகள் எப்படி நம்மை கைவிடவில்லையோ நாமும் பள்ளிகளை கைவிடாது காத்திடுவோம். அரசோடு இணைந்து செயல்படுவோம். #விழுதுகள் சிறக்க வாழ்த்துகள்’’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.