Cbse Topper: ’’ட்யூஷன் இல்லை, தினசரி 20 மணிநேரம் படிப்பேன்’’ சிபிஎஸ்இ தேர்வில்500-க்கு 500 மதிப்பெண் வாங்கிய மாணவி பேட்டி!
என்சிஇஆர்டி புத்தகங்களை முழுமையாகப் படித்தேன். அதில் உள்ள ஒரு வார்த்தையைக் கூட விடாமல் படித்து தேர்வுக்குத் தயார் ஆனேன் என்று ஸ்ருஷ்டி சர்மா தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் (மே 13) வெளியாகின. 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 23 லட்சத்து 71,939 பேர் தேர்வை எழுதிய நிலையில், 22 லட்சத்து 21 ஆயிரத்து 636 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 93.66% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.06 சதவீதம் அதிகம் ஆகும்.
மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி
மாணவிகளைப் பொறுத்தவரையில், 95 சதவீதம் பேரும் மாணவர்கள் 92.63 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம் வழக்கம்போல மாணவிகளே மாணவர்களைக் காட்டிலும் 2.37 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வழக்கம்போல திருவனந்தபுரம் மண்டலம் 99.79 சதவீதத் தேர்ச்சியோடு முதலிடத்தைப் பெற்றுள்ளது. விஜயவாடாவும் அதே சதவீதத் தேர்ச்சியைப் பெற்றது.
500-க்கு 500 பெற்று சாதனை
பஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்த ஸ்ருஷ்டி சர்மா என்னும் 10ஆம் வகுப்பு மாணவி 500-க்கு, 500 மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார். ட்யூஷன் எதுவும் செல்லாமலேயே இந்த சாதனையை ஸ்ருஷ்டி படைத்துள்ளார்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியபோது, ’’நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய குடும்பத்தினர் மற்றும் ஆசிரியர்களைப் பெருமைப்படுத்தி இருக்கிறேன். ட்யூஷன் எதற்கும், நான் செல்லவில்லை. தினசரி 20 மணி நேரம் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். நான் தன்னம்பிக்கையை இழந்தபோதெல்லாம், என்னுடைய பெற்றோர்கள் எனக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.
தினசரி 20 மணி நேரம் படிப்பு
என்னுடைய தந்தை என்னுடைய மிகப்பெரிய உத்வேகம் அளித்த நபர். என் மீது எப்போதுமே நம்பிக்கை வைத்திருந்தார்.
என்சிஇஆர்டி புத்தகங்களை முழுமையாகப் படித்தேன். அதில் உள்ள ஒரு வார்த்தையைக் கூட விடாமல் படித்து தேர்வுக்குத் தயார் ஆனேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
ஐஐடி மும்பையில் படிக்க ஆசை
மேலும் பேசிய அவர், ’’எனக்குப் பொறியாளர் ஆக வேண்டும் என்று ஆசை. ஐஐடி பாம்பேயில் படிக்க வேண்டும் என்பதே எனது கனவு’’ என்றும் ஸ்ருஷ்டி தெரிவித்துள்ளார்.






















