Scholarship : மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை ! ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் உதவித்தொகை திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் உதவித்தொகை திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.
ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் உதவிதொகை பெறலாம்
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
தமிழகத்தில் ஏழை எளிய குடும்ப மாணவ மாணவிகள் பொருளாதார சிக்கல்கள் காரணமாக 10 அல்லது பிளஸ் 2 முடித்தவுடன் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. இவர்களின் கல்வி தடைபடாமல் உயர்கல்வி சேர்க்கை அதிகரிக்கும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் மூலம் உயர் கல்வி படிப்பு உறுதி செய்யப்படுகிறது.
6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் படித்து முதன் முதலில் மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டு முதல் திருநங்கைகளும் பயன்பெறும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. கல்லுாரியில் சென்று பயிலும் மாணவ மாணவியருக்கு மட்டுமே இந்த உதவி தொகை வழங்கப்படும்.
ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இருந்தாலும் இத்திட்டங்களின் கீழ் உதவிதொகை பெறலாம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை தமிழ் புதல்வன் திட்டத்தில் மொத்தம் 4,694 மாணவர்களும், புதுமைப்பெண் திட்டத்தில் மொத்தம் 4,188 மாணவிகளும் பயனடைந்து வருகின்றனர். எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 2 முடித்த அனைவரும் உயர்கல்வியில் சேர்ந்து, வாழ்வில் வெற்றிபெற வேண்டுமென தெரிவித்துள்ளார்.
புதுமைப் பெண் திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 05.09.2022 அன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வீதம் உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தினை தொடங்கி வைத்தார். மாநிலத்தின் அனைத்து வளர்ச்சியிலும் பெண்களுக்கு உரிய இடம் வழங்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை என்ற பெயரை "சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை" என மாற்றம் செய்துள்ளது.
பெண் கல்வியைப் போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழகத்தைத் தாங்கும் அறிவியல் வல்லுநர்களாகவும், மருத்துவராகவும், பொறியாளராகவும், படைப்பியலாளராகவும், நல்ல குடிமக்களைப் பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தைச் சார்ந்தவராகவும், உருவாக அடித்தளமாக புதுமைப் பெண் என்னும் உன்னத திட்டத்தைத் தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம், பெண்களுக்கு உயர் கல்வி அளித்து, பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தைக் குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பைத் தொடர ஊக்குவித்தல், உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்துத் துறைகளிலும் பங்கேற்கச் செய்தல், உயர்கல்வி உறுதித் திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்யப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும் அல்லது தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைத் திட்டத்தின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்று 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவியர்களாக இருத்தல் வேண்டும். மாணவிகள் 8-ஆம் வகுப்பு அல்லது 10-ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்புகளில் படித்து பின்னர், முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் (Higher Education Institutions) சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.





















