Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
ஏழைக்கொரு நீதி, வசதி படைத்த கல்வி வியாபாரிகளுக்கு வேறொரு நீதியா? தமிழ்நாடு அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்- மார்க்சிஸ்ட்.

தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா பல்கலைக்கழக விவகாரத்தில் ஏழைக்கொரு நீதி, வசதி படைத்த கல்வி வியாபாரிகளுக்கு வேறொரு நீதியா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
தஞ்சை, சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பல்கலை. நிர்வாகம் விடுதி கட்டியதாகப் புகார் எழுந்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இதை மார்க்சிஸ்ட் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:
கோடிக்கணக்கில் வசூல்
தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா பல்கலைக்கழக வளாகத்திற்குள், தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான 31.37 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து மாணவர் விடுதியைக் கட்டி, கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கட்டணம் என்ற பெயரில் வசூலித்து லாபமடைந்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம். இந்த நிலத்தை மீட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல போராட்டங்களை நடத்தியது.
கீழமை நீதிமன்றம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க உத்தரவிட்டது. அவர்கள் உயர் நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் நிலத்தை மீட்க உத்தரவிட்டது. அவர்கள் உச்ச நீதிமன்றம் சென்றார்கள். நேற்று உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்துவிட்டது.
31 ஏக்கர் அரசு நிலத்தை மீட்க கூடாதா?
வேறு இடமே இல்லாமல் தனது குடும்பம் வாழ 3 சென்ட் இடத்தில் குடிசை அமைத்தால், ஆகப்பெரிய குற்றம் என்று கூறி உடனே அப்புறப்படுத்த உத்தரவிடும் நீதிமன்றங்கள், பல நூறு ஏக்கரில் பல்கலைக்கழகம் நடத்துபவர் ஆக்கிரமித்துள்ள 31 ஏக்கர் அரசு நிலத்தை மீட்க கூடாது என்று தடை விதித்துள்ளது.
ஏழைக்கொரு நீதி, வசதி படைத்த கல்வி வியாபாரிகளுக்கு வேறொரு நீதியா? தமிழ்நாடு அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் பதிவிட்டுள்ளார்.






















