Samagra Shiksha Abhiyan: மத்திய அரசு தராத எஸ்எஸ்ஏ நிதி; தமிழ்நாட்டில் 32,500 அரசு ஊழியர்களுக்கு ஊதியம் நிலுவை!
தமிழ்நாட்டில் 32 ஆயிரத்து 500 அரசு ஊழியர்களுக்கு மேல் ஊதியம் வழங்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
எஸ்எஸ்ஏ எனப்படும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு பாக்கி வைத்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 32 ஆயிரத்து 500 அரசு ஊழியர்களுக்கு மேல் ஊதியம் வழங்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
சமக்ர சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ) எனப்படும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் மழலைக் கல்வி முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கல்வி வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மாநிலங்களுக்கு சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் குறிப்பிட்ட அளவிலான நிதியை மத்தியக் கல்வி அமைச்சகம் வழங்கி வருகிறது. இதன்படி 60 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கும். மீதமுள்ள 40 சதவீத நிதிக்கு மாநில அரசே பொறுப்பு.
அக்டோபர் ஆகியும் வழங்கப்படாத ஜூன் மாத நிதி
இந்த நிலையில் 2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான தமிழக நிதியாக ரூ.3,586 கோடி, மத்திய அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் பங்கான 60 சதவீதத் தொகை ரூ.2,152 கோடி 4 தவணைகளில் ஒதுக்கீடு செய்யப்படும். முதல் தவணையாக ரூ.573 கோடி நிதி ஜூன் மாதம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். எனினும் அக்டோபர் மாதமே தொடங்கிவிட்ட நிலையில், நிதி இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதுகுறித்துத் தமிழக அரசு பல்வேறு நினைவுறுத்தல் கடிதங்களை அளித்தும், மத்திய அரசு இதுவரை கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.
ஐஏஎஸ்-க்கே ஊதியம் வழங்கப்படவில்லை
சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்துக்கான நிதி நிறுத்தப்பட்டிருப்பதால், வட்டார வள மைய பயிற்றுநர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் உள்ளிட்ட 15 ஆயிரம் பேர், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 17,500 பேர் என சுமார் 32,500 பேருக்கு ஊதியம் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எஸ்எஸ்ஏ திட்டத்தின் இயக்குனராக பணியாற்றும் ஆர்த்தி ஐஏஎஸ்-க்கே ஊதியம் வழங்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 2ஆம் தேதி ஆகிவிட்ட நிலையில், செப்டம்பர் மாதத்துக்கான ஊதியம் இன்னும் தமிழ்நாடு அரசால் அளிக்கப்படவில்லை.
என்ன செய்ய வேண்டும்?
இந்த நிலையில், மத்திய அரசிடம் வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நிதியைப் பெற வேண்டும் என்றும் அதுவரை மாநில அரசு தன்னுடைய பிற நிதிகளில் இருந்து, ஒருங்கிணைந்த கல்வித் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் எனவும் கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.