QS Ranking Tamil Nadu: உலகிலேயே டாப் கல்லூரிகள் பட்டியல்: தமிழ்நாட்டில் 8 பல்கலை.களுக்கு இடம்- யார் யார்?
QS World University TamilNadu Rankings: உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் க்யூஎஸ் தரவரிசைப் பட்டியலில், தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்கள் எவை இடம்பிடித்துள்ளன தெரியுமா? இதோ லிஸ்ட்!

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் க்யூஎஸ் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியான நிலையில், அதில் இடம்பெற்றுள்ள தமிழகப் பல்கலைக்கழகங்கள் குறித்து விளக்கமாகக் காணலாம்.
உலகளவில் உயர்கல்வியின் தரம் குறித்து க்யூஎஸ் (குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்) என்ற அமைப்பு ஆய்வு செய்து, கல்வி நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.
கல்வி நிறுவனத்தின் நற்பெயர், ஆசிரியர்கள் பிரசுரித்த ஆய்விதழ்கள், கல்வி சார்ந்து இருக்கும் நற்பெயர், வேலைவாய்ப்புகள், நிலைத் தன்மை, ஆசிரிய-மாணவர் விகிதம், கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் வெளிநாட்டு ஆசிரியர்கள் எண்ணிக்கை, சர்வதேச ஆராய்ச்சி பின்புலம், வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
அமெரிக்க பல்கலைக்கழகங்கள் அசத்தல்
இந்த நிலையில் க்யூஎஸ் அமைப்பு தனது 22ஆவது சர்வதேச பல்கலைக்கழக தர வரிசைப்பட்டியலை இன்று (ஜூன் 19) வெளியிட்டது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது. 14 ஆண்டுகளாக இந்த பல்கலைக்கழகமே முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தை லண்டன் இம்பீரியல் கல்லூரி பெற்றுள்ளது. அதேபோல ஸ்டான்ஃபோர்டு பல்கலை. 3ஆவது இடத்தையும் ஆக்ஃபோர்டு பல்கலை. 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. ஹார்வர்டு பல்கலைக்கழகம் 5ஆம் இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்கள் எவை இடம்பிடித்துள்ளன தெரியுமா? இதோ லிஸ்ட்!
1 - ஐஐடி சென்னை 2026ஆம் ஆண்டில் 180-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
2 – அண்ணா பல்கலைக்கழகம் 383 465ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
3- வேலூர் பல்கலைக்கழகம் தற்போது 691ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 791 முதல் 800 வரையிலான இடத்தில் முன்பு இருந்தது.
4- என்ஐடி திருச்சி 734ஆம் இடத்துக்குச் சரிந்துள்ளது. முன்னதாக 2025ஆம் ஆண்டில் 701-710 இடத்தில் இருந்தது.
5- சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் கல்லூரி இந்த ஆண்டு 926ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. முன்பாக 951-1000ஆம் இடத்தில் சவீதா கல்லூரி இருந்தது.
6- அமிர்த விஸ்வ வித்யாபீடம் 1001-1200 இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டும் இதே இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 1008ஆம் இடத்தை அமிர்தா பெற்றுள்ளது.
7 - SRM இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, சென்னையும் இதே இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, 1097ஆவது இடத்தில் SRM உள்ளது.
8 - புதுச்சேரி பல்கலைக்கழகம் 1201- 1400ஆம் இடத்தை தக்க வைத்துள்ளது. 1274ஆம் இடத்தில் உள்ளது.
9 - அதேபோல சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) 1201- 1400ஆம் இடத்தைத் தக்க வைத்துள்ளது. 1284ஆம் இடத்தில் சத்யபாமா உள்ளது.
முழு விவரங்களை https://www.topuniversities.com/world-university-rankings என்ற இணைப்பில் காணலாம்.





















