Private School : தனியார் பள்ளி வாகனங்களை அரசு நிகழ்வுக்குக் கட்டாயப்படுத்தி கொண்டுசெல்வதா?- பள்ளிகள் சங்கம் வேதனை
அரசு நிகழ்ச்சிக்குத் தனியார் பள்ளி வாகனங்களை பள்ளி வேலை நாட்களில் கட்டாயப்படுத்தி எடுத்துச் செல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
அரசு நிகழ்ச்சிக்குத் தனியார் பள்ளி வாகனங்களை பள்ளி வேலை நாட்களில் கட்டாயப்படுத்தி எடுத்துச் செல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் தமிழக முதல்வருக்குக் கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்விப் பயன்பாட்டுக்காக காலையிலும் மாலையிலும் குழந்தைகளை அழைத்து வர பள்ளி வாகனங்கள் உள்ளன. இந்த பள்ளி வாகனங்களில் பள்ளியின் பெயரை முழுதும் மறைத்து, மூன்று புறமும் பள்ளி நிர்வாகிகளின் சொந்த செலவில், 'நமது சென்னை நமது செஸ் நமது பெருமை' என பெரிய பெரிய ஸ்டிக்கரை ஒட்டச் சொல்லி ஆர்டிஓக்கள் வற்புறுத்துகிறார்கள்.
பின்னர் மீண்டும் பெயிண்ட் அடிக்க பெரும் செலவு ஏற்படும். பள்ளி வாகனங்கள் எல்லாமே பெரும்பாலும் மஞ்சள் நிறத்தில் உள்ளதால், எந்தப் பள்ளி வாகனம் என மாணவர்களுக்குத் தெரியாமல் பெரிய குழப்பம் ஏற்படும். தயவுசெய்து அதை உடனே தடுத்து நிறுத்திட வேண்டும். பதிலாக அரசு பேருந்துகளில் விளம்பரம் செய்தால் சரியாக இருக்கும். தனியார் பேருந்துகளில் விளம்பரம் செய்கிறபோது எதிர்க் கட்சிக்காரர்களோ சமூக விரோதிகளோ அதன் மீது கல்லெறியக் கூடும். அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்.
அதேபோல் அண்மையில் கரூரில் நடைபெற்ற அரசு விழாவிற்குத் தமிழக முதல்வரின் வருகையின்போது, கரூர் மாவட்டத் தனியார் பள்ளிகள் அனைத்தும் தங்கள் சொந்த செலவில் வாகனங்களை அனுப்பி வைக்கக் கட்டாயப்படுத்தப்பட்டனர். இதனால் பள்ளி நிர்வாகிகள் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகி உள்ளனர்.
அதேபோல் ஜூலை 8ஆம் தேதி தமிழக முதல்வர் கோவைக்கு வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த நாளில் அனைத்துத் தனியார் பள்ளி வாகனங்களையும் டீசல் நிரப்பி அனுப்ப வேண்டும் என்று ஆர்டிஓக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கெனவே கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் ஓடாத காலங்களுக்கெல்லாம் சாலை வரி, இருக்கை வரி, இன்சூரன்ஸ், எஃப்சி என்று பல்லாயிரக் கணக்கான ரூபாய்களைச் செலுத்தி, கஷ்டத்திலும் நஷ்டத்திலும் இயங்கி வரும் தனியார் பள்ளி வாகனங்கள் தற்பொழுது பள்ளி வேலை நாளில் பள்ளி வாகனங்களை பள்ளி மாணவர்களுக்காக இயக்க முடியாத சூழ்நிலை உள்ளது. பள்ளி விடுமுறை இல்லை என்பதால் பெற்றோர்களுக்கு பதில் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக முதல்வருக்கு சுய விளம்பரம் பிடிக்காது என்பது எல்லோருக்கும் தெரியும். அண்மையில்கூட தாங்கள், 'எண்ணும் எழுத்தும்' என்கிற நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்தபோது இருந்த பேனர்களை எல்லாம் அகற்ற சொன்னது அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. அதேபோல் தங்களுக்குத் தெரியாமல் பெரிய பெரிய விளம்பரங்களை வாகனங்களில் ஸ்டிக்கர் ஆக ஓட்டியும் பள்ளி வேலை நாளில் பள்ளி வாகனங்களை அனுப்பச் சொல்வதும் ஏற்புடையதாக இல்லை.
எனவே தமிழக முதல்வர் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தனியார் பள்ளி வாகனங்களை எக்காலத்திலும் எதற்காகவும் ஆர்டிஓக்கள் மிரட்டி அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளுக்குக் கேட்டு வாங்குவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வேண்டுகிறோம்''.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துறை அமைச்சர், போக்குவரத்து துறை ஆணையர் ஆகியோருக்கும் இந்த கடித நகல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்