Eligibility Certificate: எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. தகுதிச் சான்றிதழ் விண்ணப்பங்கள் நிறுத்தம் - திடீர் அறிவிப்புக்கு காரணம் என்ன?
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தகுதிச் சான்றிதழ் விண்ணப்பங்களுக்கான விண்ணப்பப் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகத் துணைவேந்தர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தகுதிச் சான்றிதழ் விண்ணப்பங்களுக்கான விண்ணப்பப் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகத் துணைவேந்தர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
’’தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் தகுதிச் சான்றிதழ் விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தகுதிச் சான்றிதழுக்கான (Eligibility Certificate) கட்டணங்கள் ஒருமைப்படுத்தப்படுவதாலும் மாணவர்கள் விண்ணப்பிக்கிற முறைகள் எளிமைப் படுத்தப்படுவதாலும் தொழில்நுட்ப மாற்றங்களைப் பல்கலைக்கழகம் செய்து வருகிறது. சீராய்வுகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதனால் தகுதிச் சான்றிதழுக்கான தொழில்நுட்ப நுழைவுகள் (Eligibility Certificate Application portal) தற்காலிகமாக மூடப்படுகின்றன.
தகுதிச் சான்றிதழ் தேவைப்படுகிற மாணவர்கள். சில நாட்கள் பொறுத்திருந்து, பின்னர் விண்ணப்பிக்கும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள். செப்டம்பர் 15-ம் தேதிக்குப் பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.’’
இவ்வாறு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மேலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அன்பு வேண்டுகோள் என்று தெரிவித்துள்ள எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், ’’யாரும் பதைபதைக்க வேண்டாம். எல்லோருடைய விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும். இந்த நிறுத்தம் தற்காலிகமானது மட்டுமே’’ என்று தெரிவித்துள்ளது.
பின்னணி என்ன?
இந்தியாவில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காத மாணவர்கள் பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று மருத்துவம் படிக்கின்றனர். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்லும் மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், நீட் தேர்வில் தகுதிபெற்று மருத்துவம் படிக்க வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்கள், தகுதிச் சான்றிதழ் பெறத் தேவையில்லை என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
அதேபோல எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளில், எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ், நர்சிங், பார்மசி, பிசியோதெரபி, தொழில்சார் சிகிச்சை, துணை மருத்துவப் படிப்புகளைப் படிக்க உள்ள மாணவர்கள் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டியது அவசியம் ஆகும்.
யாருக்கெல்லாம் தகுதிச் சான்றிதழ் கட்டாயம்?
எனினும் மாநிலப் பள்ளிக் கல்வி வாரியத்தில் படித்தவர்களுக்கு தகுதிச் சான்றிதழ் தேவையில்லை. சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட பிற வாரியங்களில் 12ஆம் வகுப்பை முடித்த மாணவர்கள் கட்டாயம் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இருந்து தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும்.
அதேபோல தமிழ்நாட்டுக்கு வெளியே 12ஆம் வகுப்பைப் படித்து முடித்தவர்களும் பிற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும்.
என்ஆர்ஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், ஓசிஐ, பிஐஓ தேர்வர்களும் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டியது அவசியம் ஆகும்.
அதேபோல வெளிநாட்டு மாணவர்களும் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இருந்து தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும்.