இனி கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் 7.5% ஒதுக்கீடு? உயர்கல்வி அமைச்சர் சட்டப்பேரவையில் தகவல்

பொறியியல், மருத்துவக் கல்லூரி மாணவர்களைப் போலவே அரசுப் பள்ளிகளில் படித்து கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கும் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கி, இலவச கல்வி கட்டணச் சலுகைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப் பேரவையில் இன்று (ஏப்.17) வினா விடை நேரத்தின்போது கும்மிடிப்பூண்டியின் சட்டமன்ற உறுப்பினர் டி. ஜே. கோவிந்தராஜன் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் 7.5% ஒதுக்கீடு விரிவுபடுத்தப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
7.5% உள் ஒதுக்கீடு
அதற்கு பதில் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், ’’தற்போது அரசுப் பள்ளிகளில் படித்து பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரியில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு போக்குவரத்து, கல்வி, தேர்வு உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்கிறது.
கலை அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் விரிவாக்கமா?
கும்மிடிப்பூண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று இதனை கலை அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் ஆகியவற்றில் படிக்கும் மாணவர்களுக்கும் செயல்படுத்த, பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)





















