Teachers Dress Code: பெண் ஆசிரியர்கள் பள்ளிகளில் தங்கள் விருப்பப்படி ஆடை அணியலாம்: அமைச்சர் அதிரடி அறிவிப்பு
பணியாளர் விதிகளுக்கு உட்பட்டு எதனை அணியவேண்டும் என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் தங்களது விருப்பப்படி, புடவையோ அல்லது சுடிதாரோ அணியலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். பணியாளர் விதிகளுக்கு உட்பட்டு எதனை அணியவேண்டும் என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் பெரும்பாலான பெண் ஆசிரியர்கள் புடவை அணிந்துகொண்டு பள்ளிக்குச் செல்கின்றனர். பெரும்பாலான ஆண் ஆசிரியர்களுக்கு பேன்ட்- சட்டையே ஆடையாக இருக்கிறது. இந்த நிலையில் புடவை அசெளகரியமாக இருப்பதாக ஆசிரியர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்தது. இதனால் சில ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வர ஆரம்பித்தனர். எனினும் இது சக ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அரசாணை சொல்வது என்ன?
இதற்கிடையே 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தமிழக அரசு, அரசாணை எண் 67-ஐ வெளியிட்டது. இதன்படி அரசு ஊழியர்கள் நேர்த்தியான, தூய்மையான, அலுவலகங்களுக்கு ஏற்ற உடைகளை அணிய வேண்டும். பெண் ஊழியர்கள் சேலை, சல்வார் கமீஸ், துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் போன்றவற்றை அணியலாம். ஆண் ஊழியர்கள் பேன்ட் - சட்டை, வேட்டி அல்லது ஏதாவது ஓர் இந்தியக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் உடையை அணிந்துவரலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த அரசாணையைக் குறிப்பிட்டு, ஆசிரியர்கள் சுடிதார் அணிந்து வரலாம் என்று பெண் ஆசிரியர்கள் குறிப்பிட்டனர். எனினும் இதற்கு சில ஆசிரியர்கள் மத்தியில் விமர்சனம் எழுப்பப்பட்டது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை தரப்பில், எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்தது.
அமைச்சர் அதிரடி அறிவிப்பு
இந்த நிலையில் கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழா இன்று (டிசம்பர் 19) பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், திருச்சியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அமைச்சர் 379 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கினார்.
பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாளில் "கனவு ஆசிரியர்" திட்டத்தின் கீழ் தேர்வு பெற்ற ஆசிரியர்களுக்குக் கனவு ஆசிரியர் விருதும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் கூறும்போது, பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் தங்களது விருப்பப்படி, புடவையோ அல்லது சுடிதாரோ அணியலாம் என்று தெரிவித்தார். மேலும் பணியாளர் விதிகளுக்கு உட்பட்டு எதனை அணியவேண்டும் என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: EXCLUSIVE: பெருமழை, பேரிடர், வெள்ளம்: இனி இதுதான் எதிர்காலமா?- நீரியல் நிபுணர்கள் சிறப்புப் பேட்டி!