NEET SS Cut-Off: நீட் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் 0 கட் ஆஃப்- அதிர்ச்சி அறிவிப்பு
நீட் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் 0 கட் ஆஃப்- அதிர்ச்சி அறிவிப்பு
முதுகலை நீட் படிப்புகளைத் தொடர்ந்து, நீட் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் 0 கட் ஆஃப் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ அறிவியலுக்கான தேர்வு வாரியம் (National Board Of Examinations In Medical Sciences) அறிவித்துள்ளது. இது மருத்துவ மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்புவதற்காக முதுகலை நீட் படிப்புகளுக்கு கட் ஆஃப் மதிப்பெண்கள், 0 பர்சன்டைலாகக் குறைக்கப்பட்டது. இதன்மூலம் நீட் தேர்வில் எதிர்மறை மதிப்பெண்களைப் பெற்றவர்கள்கூட முதுகலை மருத்துவப் படிப்பில் சேரும் நிலை ஏற்பட்டது. இதற்குக் கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. எனினும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.
உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் 0 கட் ஆஃப்
இந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் 0 கட் ஆஃப் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிவியலுக்கான தேசியத் தேர்வுகள் வாரியம் (National Board Of Examinations In Medical Sciences) அறிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தகுதித் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் நீட் இளநிலை தேர்வில் (Neet UG) தேர்ச்சி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகின்றனர். அதேபோல, எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ முதுநிலை படிப்பில் சேர, மருத்துவ மாணவர்கள் நீட் முதுநிலை தேர்வை எழுதுகின்றனர்.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் தேர்வு நடைபெறுகிறது. அதன்படி, உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான 2023-24 தேர்வு கடந்த ஆண்டு, செப்டம்பர் 29, 30ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் அக்டோபர் 15ஆம் தேதி வெளியானது. இந்தத் தேர்வை என்.பி.இ. எனப்படும் தேசியத் தேர்வுகள் வாரியம் நடத்தி வருகிறது.
கட் ஆஃப் குறைப்பு குறித்து தேசியத் தேர்வுகள் வாரியம் கூறும்போது, ‘’மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை, தேசிய மருத்துவ ஆணைய விதிமுறைகளின்படி முதுகலைப் படிப்பை முட்டித்து, நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வை 2023-ல் எழுதி இருந்தால், அவர்கள் நீட் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புக்கான சிறப்புக் கலந்தாய்வில் கலந்துகொள்ளத் தகுதியானவர்கள்’’ என்று தெரிவித்துள்ளது.
காலி இடங்களை நிரப்பவே
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 5 ஆயிரம், உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. இதில் 1000-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்காக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஓரிரு நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படிப்புகளுக்கான ஆண்டுக் கட்டணமாக ரூ.1.5 கோடி முதல் ரூ.2.5 கோடி வரை தனியார் கல்லூரிகளில் வசூல் செய்யப்படுகிறது. இந்த முடிவுக்குக் கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கூடுதல் தகவல்களுக்கு: https://natboard.edu.in/viewnbeexam?exam=neetss