Annamalai : நீட் தேர்ச்சி குறைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சரே காரணம்; அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் நீட் பயிற்சி- அண்ணாமலை
நீட் தேர்ச்சி குறைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சரே காரணம் என்றும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் நீட் பயிற்சி வழங்கிட வேண்டும் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நீட் தேர்ச்சி குறைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சரே காரணம் என்றும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் நீட் பயிற்சி வழங்கிட வேண்டும் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் ஆதாயத்திற்காக திமுக செய்து வரும்
மலிவான அரசியல் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’தமிழகத்தில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ செல்வங்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிக்காக முயற்சி செய்து சிலர் தேர்ச்சி பெறாமல் போயிருக்கலாம். அதனால் நீங்கள் கற்றது வீண்போகாது, மீண்டும் முயற்சியுங்கள், வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் செயல்படுங்கள், நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
சென்ற வருடம் 99,610 மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில், இந்த வருடம் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 1,32,167ஆக உயர்ந்துள்ளது. நீட் தேர்வை தமிழக மாணவ செல்வங்கள் மற்ற தேர்வுகளை போல சுலபமாக எதிர்கொள்ள தொடங்கிவிட்டதற்கான சான்று இதுவே. தேர்வு எழுதிய மாணவர்களில் 67,787 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்ற வருடம் தமிழகத்திலிருந்து தேர்ச்சி பெற்ற மாணவர்களை விட இந்த வருடம் 10,572 மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள்
சென்ற வருடம் தமிழ் மொழியில் நீட் தேர்வை எதிர்கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 19,868ஆக இருந்த நிலையில் இந்த வருடம் 31,965ஆக உயர்ந்தது. இது நமது அரசு பள்ளி மாணவ மாணவிகள் அதிக அளவில் நீட் தேர்வை எதிர்கொண்டுள்ளனர் என்பதை எடுத்துரைக்கிறது. சென்ற ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தமிழ் மொழியில் நீட் தேர்வை எதிர்கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 61 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்கள் பெரிதளவில் நீட் தேர்வை எதிர்கொள்ள துவங்கியுள்ளனர் என்பதற்கு இது மேலும் ஒரு சாட்சியாகும்.
அகில இந்திய அளவில் பட்டியலின மாணவர்களின் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை சென்ற வருடத்தை விட இந்த வருடம் 15 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. அதே போல் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி 18 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த வளர்ச்சி தமிழகத்திலும் நிச்சயமாக எதிரொலித்திருக்கும்.
கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் வேறு வழியில்லாமல் நீட் தேர்வு எழுதி வருகின்றனர் என்பது போன்ற உண்மைக்கு புறம்பான தகவலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறுவது மாணவர்களை சிறுமைப்படுத்துவது போன்றதாகும். மக்களை திசைதிருப்புவது, உதாசீனப்படுத்துவது, சிறுமைப்படுத்துவது தான் திமுக அமைச்சர்கள் ஆட்சிக்கு வந்த நாள் முதல் மறவாமல் செய்யும் ஒரே பணி. மருத்துவ சேர்க்கைக்கு நுழைவு தேர்வு இல்லாத பத்து வருட காலத்தில் (2007-2016) ஆண்டுக்கு சராசரியாக 31 அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். இவர்களில் கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதை தெரிந்து கொண்டே அமைச்சர் இவ்வாறு பேசுவது மலிவான அரசியல்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சமவாய்ப்பு
நீட் தேர்வு வந்த பின்பும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் பாஜக தேசிய தலைவர் நட்டா பரிந்துரைத்தது போல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கட்டுக்கு பிறகு சமூக நீதி நிலைநாட்டப்பட்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சமவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வருடம் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கும் காரணம் திமுகவின் சுயலாப சிந்தனைகளும், இயலாமையின் மறுவுருவமாக திகழும் பள்ளிக்கல்வி துறை அமைச்சரே ஆவார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த E-Box எனப்படும் பயிற்சி முறையை திமுக ஏன் கைவிட்டது என்பதை மக்களுக்கு விளக்கவேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவது திமுக அமைச்சர்களின் கண்களை உறுத்துகிறது. சென்ற ஆண்டு பெரிதளவு அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இப்படி மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் ஆதாயத்திற்காக விளையாடிய திமுக வெட்கி தலை குனியவேண்டும்.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் முந்தைய திமுக ஆட்சியில் Fixing முறையில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எவ்வாறு மருத்துவ சேர்க்கை நடைபெற்றது என்பதை ஒரு நேர்காணலில் ஒப்புக்கொண்டார். அந்த நடைமுறையை மீண்டும் கொண்டுவந்து ஊழலில் கொழிக்க நீட் தேர்வை எதிர்த்து வருகிறது திமுக.
தொடர்ச்சியாக மாணவர்களை பலவீனப்படுத்தும் திமுக அரசு
ஒரு அரசின் கடமை மாணவர்களை தயார்படுத்தி அவர்களை எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள செய்வது தானே தவிர அவர்களை பலவீனப்படுத்துவது ஒரு அரசுக்கு அழகல்ல. திமுக தொடர்ச்சியாக மாணவர்களை பலவீனப்படுத்தி வருவதை இனிமேலாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்.
திமுக ஆட்சியில் மறுக்கப்பட்டு வரும் நீட் பயிற்சியை பொருட்படுத்தாமல் பல அரசுப்பள்ளி மாணவர்கள் தங்கள் சொந்த முயற்சியால் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், மாணவர்களுக்கு உதவிய ஆசிரியர் பெருமக்களுக்கும், பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
கைவிடப்பட்ட E-Box முறையை உடனடியாக செயல்படுத்திட வேண்டும். மேலும் சமூக நீதி மற்றும் சம உரிமைக்கு எதிராக செயல்பட்டு அரசுப்பள்ளி மாணவர்களை வஞ்சிப்பதை திமுக அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்’’.
இவ்வாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.