NEET Re Exam Hall Ticket: 6 மையங்களில் ஜூன் 23 நீட் மறுதேர்வு; ஹால் டிக்கெட் வெளியானது!
1563 மாணவர்களுக்கு நாளை மறுநாள் நீட் மறுதேர்வு நடைபெற உள்ள நிலையில், அவர்களுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்த 1563 மாணவர்களுக்கு நாளை மறுநாள் நீட் மறுதேர்வு நடைபெற உள்ள நிலையில், அவர்களுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது.
நீட் தேர்வு முடிவுகள்தான் இந்தியா முழுவதும் அதிகம் பேசப்படும் ஒன்றாக மாறி வருகிறது. நீட் தேர்வு வினாத்தாள் மோசடி, ஆள் மாறாட்டம், தேர்வு முடிவுகளில் கருணை மதிப்பெண்கள் வழங்கிய விதம், ஒரே தேர்வறையைச் சேர்ந்த 8 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளைக் குறிப்பிட்டு, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை எதிர்த்து ஏராளமான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
நீட் மறு தேர்வை எழுதும் மாணவர்களுக்கு, ஜூன் 23ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. ஜூன் 30ஆம் தேதிக்கு முன்னதாகத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேசிய தேர்வுகள் முகமை சார்பில் தெரிவிக்கப்பட்டது. கருணை மதிப்பெண்கள் இல்லாமல் அவர்கள் பெற்ற மதிப்பெண்களே உண்மையான மதிப்பெண்களாக இருக்கும் எனவும் விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் இந்தத் தேர்வை எழுதினால் போதும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
44 பேர் கருணை மதிப்பெண்கள் மூலம் 720
இதற்கிடையே 2024ஆம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு முடிவுகளில் 67 பேர், 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், கருணை மதிப்பெண்கள் மூலம் 44 பேர் 720 மதிப்பெண்கள் பெற்றது தெரிய வந்தது.
ஹால் டிக்கெட் வெளியீடு
இந்த நிலையில், கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்த 1563 மாணவர்களுக்கு நாளை மறுநாள் நீட் மறு தேர்வு நடைபெற உள்ள நிலையில், அவர்களுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது. இவர்களுக்கான தேர்வு மையங்கள் மாற்றப்பட்டு 6 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. குறிப்பாக 6 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்ற ஹரியாணா மாநிலத்தின் ஜஜ்ஜார் தேர்வு மையமும் மாற்றப்பட்டுள்ளது.
இந்த 1563 மாணவர்களுக்கும் ஜூன் 23 மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. இந்த மாணவர்கள் https://nta.ac.in/ என்ற இணையதளத்தை க்ளிக் செய்து, ஹால் டிக்கெட்டைப் பெறலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://neet.ntaonline.in
இதற்கிடையே மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 6ஆம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.