NEET PG Exam Centre: பல நூறு கி.மீ. தாண்டி வெளி மாநிலங்களில் நீட் முதுகலை தேர்வு; தமிழக மாணவர்கள் குமுறல்- அரசு நடவடிக்கை எடுக்குமா?
NEET PG Exam 2024 Centre: தேர்வு மையங்களைத் தமிழ்நாட்டுக்கே மாற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
நீட் முதுகலைத் தேர்வு மையங்கள், பல நூறு கி.மீ. தாண்டி வெளி மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தேர்வு மையங்களைத் தமிழ்நாட்டுக்கே மாற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
நீட் முதுகலைத் தேர்வு
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்களில் எம்டி (Doctor of Medicine), எம்எஸ் (Master of Surgery) மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புகளில் சேர நீட் முதுகலைத் தேர்வு நடத்தப்படுகிறது. அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் முதுநிலை மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது.
இதற்கிடையே நீட் முதுகலைத் தேர்வு ஜூலை 7ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் தேர்வுக்கு 12 மணி நேரத்துக்கு முன்னதாக ஜூன் 22ஆம் தேதி தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பிற நுழைவுத் தேர்வுகளில் கண்டறியப்பட்ட பல்வேறு முறைகேடுகள் காரணமாக, நீட் முதுகலைத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
முதல் முறையாக 2 ஷிஃப்ட்டுகளில் தேர்வு
இதுகுறித்துப் பேசிய தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத் தலைவர், தேர்வு மையங்களின் எண்ணிக்கை முறைப்படுத்தப்படும். இதனால் முதல் முறையாக 2 ஷிஃப்ட்டுகளில் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
தொடர்ந்து ஆகஸ்ட் 11ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கான ஹால் டிக்கெட் ஆக.8ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், தேர்வு மைய ஒதுக்கீடு விவரம் நேற்று (ஜூலை 31) வெளியானது. இதில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஊரகப் பகுதிகளில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகப் புகார்க் குரல்கள் எழுந்துள்ளன.
திருச்சியைச் சேர்ந்த எனக்கு அனந்த்பூரில் தேர்வு மையம்
இதுகுறித்துப் பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவர் ஏபிபி நாடுவிடம் கூறும்போது, ’’திருச்சியைச் சேர்ந்த எனக்கு அனந்த்பூரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தேர்வு மையத்துக்கு இணையதளம் திறக்கப்பட்ட அரை மணி நேரத்தில், நான் திருச்சி, மதுரை, சென்னை மற்றும் கடைசியாக திருப்பதி ஆகியவற்றைத் தேர்வு செய்திருந்தேன். 4 ஆப்ஷன்கள் கட்டாயம் என்பதால், அவ்வாறு கொடுத்தேன். ஆனால் எனக்கு, திருப்பதியில் இருந்து 6.17 மணி நேரம் தொலைவில் உள்ள அனந்த்பூர் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது எந்த வகையில் நியாயம்?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
செல்வதற்கு மட்டும் 15 ஆயிரம் ரூபாய் கட்டணம்
அதேபோல இன்னொரு மருத்துவ மாணவி பேசும்போது, ’’திருநெல்வேலியைச் சேர்ந்த எனக்கு கர்னூலில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், ரயில்கள் எதிலும் இடங்கள் இல்லை. விமான டிக்கெட்டின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. செல்வதற்கு மட்டும் 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் ஆகிறது. இதுபோக அங்கே தங்குவதற்கு, இருப்பதற்குத் தனியாக செலவழிக்க வேண்டும். திரும்பி வர வேண்டும். பெண் என்பதால் உடன் யாராவது வர வேண்டியிருக்கிறது. ஒரு தேர்வை எழுதுவதற்காக மட்டும் நான் எவ்வளவு செலவழிக்க வேண்டும்?’’ என்று கோபக்குரல் எழுப்புகிறார்.
அதேபோல நிறைய தமிழக மாணவர்களுக்கு ராஜமுந்திரி என ஆந்திரப் பிரதேசத்தின் ஊரகப் பகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் இந்த நிலை இல்லை. பிற மாநில மாணவர்களும் வெவ்வேறு மாநிலங்களில் நீட் முதுகலைத் தேர்வுக்கான மையங்கள் ஒதுக்கீடு செய்திருப்பதாக எக்ஸ் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளனர்.
வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, அலைச்சலை மட்டுமல்லாது மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
இதுகுறித்து அரசும், நாடாளுமன்ற எம்.பி.க்களும் உடனடியாகத் தலையிட்டு தேர்வு மையங்களே சொந்த மாநிலங்களுக்கே மாற்றிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கையாக உள்ளது.