NEET PG 2023 Postponement : திட்டமிட்ட தேதியில் நீட் முதுநிலைத் தேர்வு; தேதியை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி- உச்சநீதிமன்றம் உத்தரவு!
NEET PG 2023 Postponement: முதுகலை நீட் தேர்வு திட்டமிட்டப்படி மார்ச்-5 ஆம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் முதுகலை நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதியை (மார்ச்,3) தள்ளிவைக்க கோரி தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், நீட் தேர்வு திட்டமிட்டப்படி மார்ச் 5- ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் மார்ச் 5-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. நீட் முதுகலை தேர்வு நடைபெறும் தேதியை மாற்றிக்க வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீதிபதிகள் எஸ். ரவீந்திர பட், திபாங்கர் தட்டா ஆகிய இருவர் அடங்கிய அமர்வு இதனை விசாரித்தது. நீட்தேதியை மாற்றியமைக்க கோரிய வழக்கில் ‘ தேர்வு அறிவிக்கப்பட்ட தேதி மிக குறுகிய காலகட்டம் என்பதால் மாணவர்கள் தயாராவதற்கு நேரம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.மாணவர்கள் Internship சென்று கொண்டிருப்பதால் தேர்வு தேதியை மாற்றியமைக்க கோரிக்கை எழுந்தது. ”
இந்நிலையில், விசாரனையின் போது AGS ஐஸ்வர்யா பாட்டி கூறுகையில் “ நீட் முதுகலை தேர்வு தேதி ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டதாகவும், முதல் முறையிலேயே 2.03 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டதாகவும் அவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
நீட் முதுகலை தேர்விற்கு விண்ணப்பிக்க இரண்டாவது வாய்ப்பு வழங்கியபோது 6000 மாணவர்களே விண்ணப்பித்திருந்தனர் என்றும் அவர் வாதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சீனியர் வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன் கூறுகையில், “ Intership மற்றும் நீட் தேர்வுக்கான இடைப்பட்ட காலம் என்பது இரண்டு மாதங்கள் வழங்கப்படுவதே வழக்கமாகும். “ என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. தேர்வும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு
எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ் (சித்தா), ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது.
முன்னதாக, கடந்த ஜூலை 17-ந் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் விண்ணப்பித்தனர். பி.டி.எஸ். எனப்படும் பல் மருத்துவம் மற்றும் எம்.பி.பி.எஸ். எனப்படும் இளங்கலை மருத்துவ படிப்புகள் இரண்டிற்குமான நீட் தேர்வை மொத்தம் 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் எழுதியிருந்தனர்.
நாட்டின் மருத்துவக் கல்வி முறையில் மாற்றம் தேவை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிசந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, நீட் மற்றும் மருத்துவ சேர்க்கை தொடர்பான அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்கு வந்துள்ளதாகவும், இது மருத்துவக் கல்வியில் சீர்திருத்தங்கள் தேவை என்பதை சுட்டிக் காட்டுவதாகவும் கூறினார்.
”மாற்றம் அவசியம்”
19வது சர் கங்கா ராம் சொற்பொழிவு நிகழ்ச்சியில் "நீதிக்கான மருந்து: சுகாதாரத்தில் நியாயம் மற்றும் சமத்துவத்திற்கான தேடுதல்" என்ற தலைப்பில் தலைமை நீதிபதி சந்திரசூட் உரையாற்றினார். அப்போது, ”நீட் தொடர்பான தேசிய மருத்துவ ஆணையத்தின் முடிவுகளை எதிர்த்து பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் எனது தலைமையிலான அமர்வு வரை வந்துள்ளன.
பெரும்பாலும், நீதிமன்றங்கள் அரசின் கொள்கைக் களத்தில் நுழைய முடியாது. மேலும், மாணவர்களின் கருத்துகளைக் கேட்பது அரசின் கடமையாகும். இருப்பினும், அநீதி இழைக்கப்படும் போதெல்லாம், தலையிடுவது நீதிமன்றங்களின் கடமையாகிறது. நீட் வழக்குகளின் சுத்த வழக்குகள், லட்சக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கையையும் அபிலாஷைகளையும் காட்டுகின்றன. மருத்துவம் மிகவும் விரும்பப்படும் தொழில்களில் ஒன்றாகும் என்பதற்கு இது சான்றாகும்.
இந்தியாவில் மருத்துவக் கல்வியில் சீர்திருத்தங்களின் அவசியத்தின் அடையாளமாகவும் இந்த வழக்குகள் உள்ளன. நீதியின் கோட்பாடுகள் சட்டம் மற்றும் மருத்துவம் ஆகிய இரண்டின் நடைமுறைகளையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இரு துறைகளும் நியாயம், சமத்துவம் மற்றும் சமூகங்கள் மற்றும் தனிநபர்களின் நல்வாழ்வில் அக்கறை கொண்டவை” என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.