NEET PG 2022: மருத்துவர் பட்டங்களைத் திருப்பியளிப்போம்: ஆயிரக்கணக்கானோர் கூட்டாக குடியரசுத் தலைவருக்குக் கடிதம்
மருத்துவர் பட்டங்களைத் திருப்பி அளிப்போம் என ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் கூட்டாக குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவர் பட்டங்களைத் திருப்பி அளிப்போம் என ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் கூட்டாக குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து எழுதப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
''மே 21, 2022 அன்று நீட் முதுகலை தேர்வு நடத்தப்பட்டால், எங்களுடைய பெருமைமிக்க மருத்துவப் பட்டங்களை ராஷ்டிரபதி பவனில் உள்ள இந்திய அரசிடம் ஒப்படைப்பதைத் தவிர வேறு வழியில்லை. அவசர காலத்தில் கொரோனாவுக்கு எதிராகப் போரிடும் வீரர்களாக இருந்த எங்களிடம் யாருமே கருணை காண்பிக்கவில்லை.
நாங்கள் தொடர்ச்சியாக தேசிய மருத்துவ கவுன்சில் (National Medical Council ) மற்றும் தேசிய தேர்வுகள் வாரியத்தால் (National Board of Examination) மனரீதியாகத் துன்புறுத்தப்படுகிறோம். அவர்களின் நிர்வாகக் குறைபாடே இதற்குக் காரணம். இந்த விவகாரத்தில் எங்களுடைய தவறு எதுவுமில்லை. என்எம்சி மற்றும் என்பிஇ ஆகியவற்றால்தான் நாங்கள் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறோம்.
2021ஆம் ஆண்டு முதுகலை நீட் படிப்புகளுக்கான கலந்தாய்வு மே 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சில மாநிலங்களுக்கான கலந்தாய்வு அதற்குப் பிறகே நடைபெற உள்ளது. தேசிய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படி, மருத்துவக் கலந்தாய்வுக்கும் அடுத்த தேர்வுக்கும் இடையில் போதிய அவகாசம் இருக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு 3 ஆம் தேதிதான் முடிகிறது. சில மாநில மருத்துவக் கலந்தாய்வுகள் மே இறுதி வரை நடக்கும்.
இந்த சூழலில் மே 21ஆம் தேதி முதுகலை படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற உள்ளது. அகில இந்திய இடங்களுக்கான கலந்தாய்வு முடிவுபெற்ற சில நாட்களிலேயே, நீட் முதுகலைத் தேர்வு நடைபெறுவது சரியாக இருக்காது.
நாங்கள் கலந்தாய்வில் கலந்துகொள்வதா அல்லது தேர்வுக்குத் தயாராவதா என்று குழப்பத்தில் இருக்கிறோம். ஏனெனில் எங்களுக்குப் போதிய கால அவகாசம் இல்லை. ஏற்கெனவே இந்த ஆண்டு கலந்தாய்வு அட்டவணையை சுமார் 7 முறை மருத்துவ கவுன்சில் மாற்றி உள்ளது. அதேபோல மாநில மற்றும் தேசிய அளவிலான மாதிரிக் கலந்தாய்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் இவ்வாறு உருவாக்கும் நிலையற்ற தன்மைக்கு இடையில், எங்களால் எப்படிப் படிக்க முடியும்?
முன்னதாக கலந்தாய்வுக்கும் தேர்வுக்கும் இடையில் 6 முதல் 8 வார இடைவெளி இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தேசியத் தேர்வுகள் வாரியத்துக்கு தெளிவாக அறிவுறுத்தி இருந்தார்.
இந்த சூழலில் தேர்வுகளைத் தள்ளி வைக்கும் விவகாரத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும். குறைந்தது 2 மாதங்களுக்காவது நுழைவுத் தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும். ஒருகாலத்தில் கோவிட் வீரர்கள் என்று நீங்கள் அழைத்த ஆயிரக்கணக்கான மருத்துவர்களின் வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள்''.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.