NEET Exam: நீட்தேர்வு மையங்களுக்கு மாற்றி வந்த மாணவிகள்... அவசர அவசரமாக காரில் அனுப்பி வைத்த காவல்துறையினர்
சேலம் மாவட்டத்தில் 22 மையங்களில் 9,731 மாணவ மாணவியர் நீட் தேர்வு எழுதுகின்றனர்.

நாடு முழுவதும் இடைநிலை மருத்துவ படிப்புக்கான நீட்தேர்வு இன்றைய தினம் நடைபெறுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் நீட்தேர்வு சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நடக்கிறது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை 9,731 மாணவ மாணவியர் நீட் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் 22 மையங்கள் எழுதுகின்றனர்.

மாணவர்களுக்கான அனுமதி சீட்டு தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேர்வு மையம், தேர்வுக்கான நேரம், தேர்வர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தேர்வர்கள் முழுக்கை ஆடை, தங்க நகைகள், கம்மல், காப்பு, கைகடிகாரம், கூலிங் கிளாஸ் ஆகியவற்றை அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் செல்போன், கால்குலேட்டர், பேப்பர் துண்டு சீட்டுகள், பிளாஸ்டிக் பவுச், ஸ்கேல் போன்றவற்றை தேர்வு மையத்திற்கு எடுத்து செல்ல அனுமதி இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தமிழரசி என்ற மாணவிக்கு, நீட் தேர்வு மையம் தர்மபுரி மாவட்டம் கலைக் கல்லூரி தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் சேலம் கலைக் கல்லூரி என்று நினைத்து வருகை தந்தார். பின்னர் ஆல் டிக்கெட்டை பார்த்த காவலர்கள் மையத்தை மாறி வந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். உடனடியாக தர்மபுரி புறப்பட்டு செல்லுங்கள் என்று கூறி, மாணவி வந்த காரிலேயே உடனடியாக அனுப்பி வைத்தனர். மாணவியும் பதற்றத்துடன் காரில் ஏறி புறப்பட்டு தர்மபுரி நீட்தேர்வு மையத்திற்கு சென்றார்.
இதேபோல் தேசிகா என்ற மாணவி எடப்பாடி அரசு கலை கல்லூரி நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டிய நிலையில் சேலம் அரசு கலை கல்லூரிக்கு வந்த நிலையில் காவல்துறையினர் ஹால் டிக்கெட்டை பார்த்து உடனடியாக எடப்பாடி நீட் தேர்வு மையத்திற்கு செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.





















