NEET : நீட் தேர்வை ரத்துசெய்வது திமுக அரசுக்கு சாத்தியமா? எப்படி?
உண்மையிலேயே ஆளும் திமுக அரசால் நீட் தேர்வை ரத்து செய்யமுடியுமா? ஏ.கே.ராஜன் கமிட்டிக்கு அந்த ஆற்றல் இருக்கிறதா?
2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தற்போது ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அரசு முன்வைத்த முக்கிய அறிவிப்புகளில் நீட் தேர்வு ரத்தும் ஒன்று. அரசுப் பள்ளி மாணவர்கள் நலன், மாநில சுயாட்சி உரிமை, தனியார் பயிற்சி மையங்களின் பணக்கொள்ளை என பலகாரணங்களின் அடிப்படையில் திராவிட முன்னேற்ற கழகக் கூட்டணி நீட் தேர்வை தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வந்தது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆய்வு கமிட்டி ஒன்றை நிறுவியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்தக் கமிட்டியை நிறுவியதற்குப் பலதரப்பிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
They said #NEET will be scrapped in Tamil Nadu once DMK comes to power. Now appointing committee to study impact? Why?
— Sumanth Raman (@sumanthraman) June 5, 2021
Buying time to escape this year? https://t.co/I5HbM4qW2U
’ஆட்சிப் பொறுப்பேற்றதும் நீட் ரத்து செய்யப்படும்னு சொன்னாங்களே?’
‘இதுவரை அமைக்கப்பட்ட கமிட்டியெல்லாம் என்ன செய்திருக்கு? ஒன்னும் செய்யலை. அதனால் இது கண் துடைப்பு வேலை!’
‘தமிழ்நாட்டு ஆட்சியாளர்களால் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட அத்தனை அறிக்கைகளும் அப்படியேதான் இருக்கு!’
என வெவ்வேறு மாதிரியான விமர்சனங்கள் இந்தக் கமிட்டி குறித்து முன்வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை எதிர்க்கிறோம் எனத் தொடர்ந்து கூறிவந்தாலும் எதிர்ப்புக்கு மேல் வேறு எவ்வித எதிர்ப்பும் காட்டமுடியாமல் பல மாணவர்களைக் கடந்த ஆட்சி காலங்களில் பலிகொடுத்ததும் இந்த நம்பிக்கையின்மைக்குக் காரணம். உண்மையிலேயே ஆளும் அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியுமா? ஏ.கே.ராஜன் கமிட்டிக்கு அந்த ஆற்றல் இருக்கிறதா? அதற்கு ஏ.கே.ராஜன் யார் எனத் தெரிந்துகொள்வோம்.
திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்ப்பட்டியில் பிறந்த நீதிபதி அழகுமலை கருப்பன் ராஜன் அடிப்படையில் ஒரு கல்வியாளர். சட்ட பல்கலைக் கழகத்தில் இருபதாண்டுகளுக்கும் மேலாக சட்டத்துறை பேராசிரியராக இருந்தவர். மேலும் மாவட்ட மேஜிஸ்ட்ரேட்டாகப் பணியாற்றி வந்த ஏ.கே.ராஜனை 1996-ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி தமிழ்நாட்டின் சட்டத்துறை செயலாளராக நியமித்தார்.சட்டத்துறை செயலாளராக தான் பொறுப்பேற்றிருந்த (1996-1999) காலத்தில் பல முக்கிய சட்டங்களை தமிழகத்திற்கு வகுத்தார் ஏகே ராஜன். தமிழ்நாட்டில் ராக்கிங் கொடுமைகள் உச்சத்தில் இருந்த சமயத்தில் அதனைக் கடுமையாக ஒடுக்கும் வகையில் மாணவர்களின் நலன் கருதி ராக்கிங் தடைச் சட்டம் anti prohibition of ragging act மற்றும் பெண்கள் மீதான் கேலிவதைத் தடுப்புச் சட்டம் (eve teasing act) ஆகிய இருசட்டங்களை வரைவு செய்தவர் ஏகே ராஜன். 2005-ஆம் ஆண்டு இவர் நீதிபதியாக இவர் ஓய்வு பெற்ற நிலையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், ஆலயத்தில் தமிழ் ஓதுமறைகள் பயன்படுத்தலாம் என்பதற்காக 2006-ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட ஆணையை செயல்படுத்துவதற்காக ஒரு உயர்நிலை குழு அமைக்கப்பட்டது, அந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார் நீதியரசர் ஏ.கே.ராஜன். ஆக சமூகநீதியின் அவசியம் உணர்ந்த ஒருவர்தான் இந்த நீட் தேர்வு ஆய்வுக் கமிட்டிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்கின்றனர் கல்வியாளர்கள்.
ஏ.கே.ராஜன் கமிட்டியின் தேவை என்ன?
மற்றொரு பக்கம், நீட் தேர்வை ரத்துசெய்ய அரசிடம் இருக்கும் சாத்தியக்கூறுகள் என்ன என்கிற கேள்வி எழுகிறது. இதுகுறித்து விளக்கும் கல்வியாளரும் பொதுக்கல்விக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திர பாபு, ‘நீட் தேர்வு ரத்து நேரடியாகச் செயல்படுத்த முடியாது. 2006-ஆம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சியை இழப்பதற்கு முன்பு நுழைவுத் தேர்வு இல்லாமல் தொழிற்கல்வியில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தார். அந்தச் சட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றத் தீர்ப்பில்,’எந்தவிதமான வல்லுநர் குழுவின் ஆலோசனை இல்லாமல் இயற்றப்பட்ட சட்டம்’ எனக் குறிப்பிட்டிருந்தது. இரண்டாவது, குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெறவில்லை எனவும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜெயலலிதாவுக்கு அடுத்து ஆட்சிப் பொறுப்பேற்ற கருணாநிதி டாக்டர் எம்.அனந்தகிருஷ்ணன் தலைமையிலான வல்லுநர் குழுவொன்றை நியமித்தார்.அந்தக் குழுவுடைய பரிந்துரையின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்தது. 2007-ஆம் ஆண்டில் அந்தச் சட்டத்தை ஏற்றுக்கொண்டது உயர்நீதிமன்றம். ஆக, வல்லுநர் குழுவின் தேவை என்பது இதுதான். அந்தக் குழுவின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் மசோதா தாக்கல் செய்வதுதான் அரசின் மரபு. தற்போது நீதியரசர் ராஜன் தலைமையிலான குழுவின் அறிக்கை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.மேலும் மாநிலங்களவையில் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் அங்கே இது தீவிர விவாதத்தையும் உருவாக்கும். ஒருவேளை ஒப்புதல் கிடைக்காத நிலையில் தமிழ்நாடு அரசே நீதிமன்றத்தை அணுகலாம்’ என்கிறார்.
நீட் தேர்வை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்ட நிலையில் மேற்கு வங்காளமும் தமிழ்நாடும் மட்டுமே தொடர்ந்து எதிர்த்து வந்தன. இறுதியாகத் தற்போது மேற்கு வங்கமும் மத்திய பாடத்திட்டத்துக்கு ஏற்ப தனது பாடத்திட்டத்தை மாற்றிக்கொண்டு நீட் தேர்வை ஏற்றுக்கொண்டு விட்டது. தற்போது இதனை எதிர்க்கும் ஒரே மாநிலமாகத் தமிழ்நாடு மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: முதல்வர் ஸ்டாலினின் NEET ஆய்வு அதிரடி! யார் இந்த ஏ.கே ராஜன்?