Model vs Thagaisal School: மாதிரிப் பள்ளிகள்- தகைசால் பள்ளிகள் என்ன சிறப்பம்சங்கள்? வித்தியாசங்கள்? - விரிவான பார்வை!
Model Schools vs Thagaisal Schools: தகைசால் பள்ளிகளில், உண்டு, உறைவிட வசதிகள் இருக்காது. புரொஜக்டர்கள், ஸ்மார்ட் போர்டுகள், திறன் வகுப்பறைகள், நீச்சல்குளம் இருக்கும்.
தரமான கல்வி என்பது ஆடம்பரமல்ல. அவசியம்.
இதை உணர்ந்த ஆட்சியாளர்கள் கல்விக்கும் பள்ளிக்கும் செலவு செய்ய... இல்லை இல்லை முதலீடு செய்யத் தயங்கியதே இல்லை.
அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆசிரியர் தினமான நேற்று (செப்.5) புதுமைப் பெண் திட்டம் எனப்படும் மாணவிகளுக்கான உயர் கல்விக்கான உறுதித்தொகைத் திட்டத்தைச் சென்னையில் தொடங்கி வைத்தார். அத்துடன் மாதிரிப் பள்ளிகளையும் தகைசால் பள்ளிகளையும் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக இந்தப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அண்மையில் டெல்லிக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு செயல்பட்டு வரும் மாதிரிப் பள்ளிகளைப் பார்வையிட்டார். விரைவில் தமிழ்நாட்டிலும் அத்தகைய பள்ளிகள் தொடங்கப்படும் என்று உறுதி அளித்தார். அந்த வகையில் தமிழ்நாட்டில் 15 மாதிரிப் பள்ளிகளும் 26 தகைசால் பள்ளிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் மாதிரிப் பள்ளிகள், தகைசால் பள்ளிகள் குறித்து விரிவாக அறிந்துகொள்ளலாம்.
தகைசால் பள்ளிகள் (School of excellence): என்ன சிறப்பம்சங்கள்?
* மாணவர்களின் திறன்களை வளர்க்கவும், விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை அதிகரிக்கவும் இந்தப் பள்ளிகள் உதவும்.
* தகைசால் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டவையாக இருக்கும்.
* மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரத்திற்கேற்ப நவீன வசதிகள் கொண்ட வகுப்பறைகள் ஒவ்வொரு பள்ளியிலும் ஏற்படுத்தப்படும்.
* ஸ்மார்ட் வகுப்பறைகள் எனப்படும் திறன் வகுப்பறைகளும், இணைய வசதியோடு கூடிய உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களும் இப்பள்ளிகளில் ஏற்படுத்தப்படும்.
* 6ஆம் வகுப்பு முதல் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டிகள், பல்துறை வல்லுநர்கள் பங்கேற்று உரையாடும் கோடை முகாம்கள் நடத்தப்படும். ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
* தகைசால் பள்ளி மாணவர்கள் நாட்டின் முக்கியமான நிறுவனங்களை நேரில் சென்று பார்வையிட வழி செய்யப்படும்.
* பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தகைசால் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் அமைத்தல், கலைகள், நாடகங்கள், இசை போன்றவற்றை அரங்கேற்ற பெரிய அரங்கம் அமைக்கப்படும். கலைகளைக் கற்றுத் தர ஆசிரியர்களும், விளையாட்டுத் துறைக்கென உடற்பயிற்சி ஆசிரியர்களும், நூலகர்களும் பணியமர்த்தப்படுவர்.
* அனைத்து வசதிகளும் கொண்ட நூலகம் மற்றும் அர்ப்பணிப்புணர்வோடு பணியாற்றும் சிறந்த நூலகர்கள் வாயிலாக மாணவர்களின் வாசிப்புப் பழக்கம் மேம்படுத்தப்படும்.
* தொழில்முறை பயிற்சியாளர்கள் வாயிலாக விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
* கலைகள், நாடகங்கள் மற்றும் இசை ஆகியவற்றில் போட்டிகள் நடத்தப்படும்.
எங்கெங்கு தொடக்கம்?
அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தினை மேலும் உயர்த்துவதற்காக, முதற்கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் – பூந்தமல்லி, காமராஜ் நகர், சென்னை மாவட்டம் – தி.நகர், அசோக் நகர், காஞ்சிபுரம் மாவட்டம் – பெரிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டம் – காட்டாங்குளத்தூர், நந்திவரம், இராணிப்பேட்டை மாவட்டம் – ஆற்காடு, வேலூர் மாவட்டம் – வேலூர், திருப்பத்தூர் மாவட்டம் – நாட்டாரம்பள்ளி, வாணியம்பாடி, தருமபுரி மாவட்டம் – தருமபுரி, விழுப்புரம் மாவட்டம் – விழுப்புரம், சேலம் மாவட்டம் – சேலம் நகரம், குகை, ஈரோடு மாவட்டம் – ஈரோடு, நீலகிரி மாவட்டம் – கூடலூர், கோயம்புத்தூர் மாவட்டம் – கோயம்புத்தூர், திண்டுக்கல் மாவட்டம் – பழனி, கரூர் மாவட்டம் – குளித்தலை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் – திருச்சிராப்பள்ளி, கடலூர் மாவட்டம் – கடலூர், நாகப்பட்டினம் மாவட்டம் – நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டம் – பட்டுக்கோட்டை, சிவகங்கை மாவட்டம் – திருபுவனம், மதுரை மாவட்டம் – மதுரை தெற்கு, தூத்துக்குடி மாவட்டம் – கோவில்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் – திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டம் – அகஸ்தீஸ்வரம், கிருஷ்ணகிரி மாவட்டம் - கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டம் – திருப்பூர் ஆகிய இடங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடங்கப்படுகிறது.
மாதிரிப் பள்ளிகள் (Model Schools)
* அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை மாதிரிப் பள்ளிகள்வழங்கும்.
* சிறந்த கல்வி நிறுவனங்களில் தொழில்முறை கல்வி பிரிவுகளில் (அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கலை மற்றும் மருத்துவம் - STEAM) சேர்ந்து பயிலும் வாய்ப்பினை உறுதி செய்யும்.
* சிறப்பு கற்றல் மேலாண்மை அமைப்பு மூலம் மாணவரின் ஒட்டுமொத்த ஆளுமையை மெருகேற்றி இணை கல்விச் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும்.
* ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் திறன், மனோதத்துவ அடிப்படையில் தொழில் வாய்ப்புகளை மேற்கொள்ள தொழில் வழிகாட்டுதல் அளிக்கப்படும்.
மாதிரிப் பள்ளிகள் எங்கே?
சென்னை, மதுரை, திருப்பத்தூர், நீலகிரி, திருவாரூர், சிவகங்கை, ஈரோடு, ராமநாதபுரம், திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருவள்ளூர், வேலூர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 15 அரசுப் பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாக தொடங்கப்படுகின்றன.
மாணவர் சேர்க்கை எப்படி?
* மாணவர்களின் கல்வி, கலை மற்றும் விளையாட்டு போன்ற கூடுதல் பாடத்திட்டங்கள் உட்பட அவர்களின் ஒட்டுமொத்த செயல்திறனும் கணக்கில் கொள்ளப்படும்.
* அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி சேர்க்கை நடைபெறும்.
இரு பள்ளிகளுக்கும் என்ன வித்தியாசம்?
மாதிரிப் பள்ளிகள் மாணவர்களின் படிப்புத் திறமைகளை மேம்படுத்தி, தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேர வைக்க உதவும். இந்தப் பள்ளிகளில் மாணவர்கள் தங்கிப் படிக்கும் வகையில், உண்டு, உறைவிட வசதிகள் செய்யப்பட்டிருக்கும்.
அதே நேரத்தில் தகைசால் பள்ளிகளில், உண்டு, உறைவிட வசதிகள் இருக்காது. எனினும் புரொஜக்டர்கள், ஸ்மார்ட் போர்டுகள், திறன் வகுப்பறைகள், நீச்சல்குளம், உள் விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
ஆசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும். வெளிநாடுகளில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
கலைகள், இசை, விளையாட்டு உள்ளிட்ட கற்றல் இணைச் செயல்பாடுகளுக்கு தகைசால் பள்ளிகளில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.