Minister CV Ganeshan: போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், ரைட் சகோதரர்கள் போல முயற்சி செய்ய வேண்டும் - அமைச்சர் சி.வி.கணேசன்.
மாணவர்கள் ரைட் சகோதரர்களை முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு கடின உழைப்பு மற்றும் தொடர் முயற்சிகள் மூலம் தங்கள் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று பேசினார்.
சேலம் மாநகர் கோரிமேடு பகுதியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டுவரும் பதிவேடுகள் குறித்தும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் வழங்கப்பட்டுவரும் உதவித்தொகைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்சித் சிங், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி நிலைய மண்டல இணை இயக்குநர் லதா, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் சங்கீதா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் வகையிலும் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலமும், பல்வேறு வெளிநாடு சுற்றுப்பயணங்கள் மூலமும் தொழில் முதலீடுகளையும், பல்வேறு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கித்தந்துள்ளார். இத்தகைய புதிய வேலை வாய்ப்புகளுக்கான திறமைகளை இளைஞர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோன்று, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு, இதன் மூலம் பல்வேறு வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் பெற்று வருகின்றனர். இச்செயல் திட்டங்களை மென்மேலும் மேம்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெற்ற தேர்வுகளில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் நடத்தப்பட்ட பயிற்சியின் மூலம் 421 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 13,705 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்துள்ளனர் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.
முன்னதாக, அமைச்சர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களிடையே கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியது, வானில் பல ஆண்டுகளாய் பறக்க முயன்ற பல அறிஞர்கள் தோல்வியுற்றபோதும், ரைட் சகோதாரர்கள் பல்வேறு சோதனைகளுக்குப்பின் வெற்றி பெற்றனர். ரைட் சகோதரர்களால் 1903-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட விமானம் முதன்முதலில் பறக்க விட்டபோது 12 வினாடிகள் மட்டுமே பறந்தது. பிறகு 52 வினாடிகள் பறந்தது. பிறகு அதில் மோட்டார் பொறுத்தி மேலே பறந்தனர். அதுபோல தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்த காரணத்தால் தான் இன்று உலகம் முழுவதும் விமானம் பறந்து கொண்டு இருக்கிறது. எனவே, போட்டி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் இதுபோன்ற முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு கடின உழைப்பு மற்றும் தொடர் முயற்சிகள் மூலம் தங்கள் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என பேசினார்.