School Re-open: பள்ளிகள் திறக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை! - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
மதுரையைத் தொடர்ந்து திருச்சியிலும் கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அரசு உறுதியாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையின்போது, 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்தும், உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் தியேட்டர்களை திறப்பது குறித்தும் ஆலோசிக்க வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது” என்று கூறினார். பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி அமைச்சர் இவ்வாறு கூறினார். மேலும், மதுரையைத் தொடர்ந்து திருச்சியிலும் கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
முன்னதாக, கடந்த 18ஆம் தேதி பள்ளி திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. அதில், அனைத்து பள்ளிகளிலும் சானிடைசர் வைக்கப்பட்டு, சுகாதார வசதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும். கொரோனா பரவலை தடுக்க 6 அடி இடைவெளியில் மாணவர்களை அமர வைக்க வேண்டும். மாணவர்கள் கை கழுவும் வசதி, உடல் வெப்பத்தை பரிசோதனை செய்யும் கருவி ஆகியவை பள்ளியில் இடம்பெற வேண்டும். முதல் நாளில் 50 சதவீத மாணவர்களும், மறுநாளில் எஞ்சிய 50 சதவீத மாணவர்களும் மாறி மாறி பள்ளிக்கு வர வேண்டும். கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள், ஆசிரியர்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்க கூடாது. பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இதமான சூழல் இருந்தால் மாணவர்களை பள்ளி வளாகத்தில் அமர வைத்து பாடம் நடத்தலாம்;பள்ளி வளாகத்தில் எச்சில் துப்புவதை தடுக்க வேண்டும். பள்ளிவரும் மாணவர்களுக்கு வைட்டமின் சி மாத்திரை, நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்க வேண்டும். பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் உடல்நிலையை வாரம் ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனா இரண்டாவது அலையால், புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை மீண்டும் தடைபட்டது. கடந்த ஜூலை 14-ஆம் தேதி முதல், நோய்த் தோற்றுப் பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கியது. இருப்பினும், பள்ளிகளில் வகுப்பு நடத்த அனுமதி கிடையாது என்றும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று சேர்க்கைக்கான விண்ணப்பிப்பது அல்லது மாற்றுச் சான்றிதழ் பெறுவது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.