அரசு ஐ.டி.ஐ-யில் சேர்ந்தால் இத்தனை சலுகைகளா? தமிழ்ப்புதல்வன் முதல் புதுமைப்பெண் திட்டம் வரை.. முழு தகவல்!
2026-2027 கல்வியாண்டிற்கான மயிலாடுதுறை மாவட்ட அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ (ITI) சேர்க்கை தொடங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள மாணவ, மாணவிகள் இணையதளம் வாயிலாக ஜூன் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்., தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள விரிவான செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு;
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை
மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயில நடப்பு கல்வியாண்டிற்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.skilltraining.tn.gov.in என்ற முகவரியின் வாயிலாக தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். கணினி அல்லது கைபேசி மூலம் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி எளிதாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சேர்க்கைக்கான தகுதிகள் மற்றும் வயது வரம்பு
இத்தொழிற்பயிற்சி படிப்புகளில் சேருவதற்குப் பின்வரும் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 14 வயது பூர்த்தியடைந்தவர்களாக இருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பு: ஆண்களைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். எனினும், பெண் விண்ணப்பதாரர்களுக்கு எவ்வித அதிகபட்ச வயது வரம்பும் விதிக்கப்படவில்லை. அனைத்து வயதுப் பெண்களும் இத்துறையில் சாதிக்க ஏதுவாக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்
இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரர்கள் தங்களின் பின்வரும் அசல் சான்றிதழ்கள் மற்றும் விவரங்களைக் கையில் வைத்திருக்க வேண்டும்.
1. அசல் கல்விச் சான்றிதழ் (8-ஆம் வகுப்பு அல்லது 10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்)
2. சாதிச்சான்று (Community Certificate)
3. மாற்றுச்சான்று (Transfer Certificate - TC)
4. அடையாளச் சான்று (மத்திய அரசின் உரிய அடையாள அட்டை)
5. தற்போதைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (Passport size photo)
6. முறையான மின்னஞ்சல் முகவரி (Email ID) மற்றும் செயல்பாட்டில் உள்ள கைபேசி எண் (Mobile Number)
செம்பனார்கோவில் அரசு ஐ.டி.ஐ-யில் நேரடி சேர்க்கை உதவி
இணையதளம் வழியாக விண்ணப்பிக்க சிரமப்படும் அல்லது கூடுதல் வழிகாட்டுதல் தேவைப்படும் மாணவர்கள், குறிப்பாக செம்பனார்கோவில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயில விரும்பினால், தங்களது அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்துக் கொண்டு நேரடியாகச் செல்லலாம். அங்குள்ள செம்பனார்கோவில் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை (Principal) நேரில் அணுகி, சேர்க்கை மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பான உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை
இணையதள விண்ணப்பத்திற்கான கட்டணமாக ரூ.50 (ரூபாய் ஐம்பது மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையிலேயே மிக எளிதாகச் செலுத்தலாம்.
இதற்காக,
* டெபிட் கார்டு (Debit Card)
* கிரெடிட் கார்டு (Credit Card)
* நெட் பேங்கிங் (Net Banking)
* யுபிஐ பேமெண்ட் (UPI-pay)
போன்ற மின்னணு பணப் பரிவர்த்தனை வசதிகளைப் பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம்.
உரிய அசல் கல்விச் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கக் கடைசி நாள் 03.06.2026 ஆகும்.
அரசு ஐ.டி.ஐ மாணவர்களுக்கான தமிழக அரசின் அள்ளிக்கொடுக்கும் சலுகைகள்
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிலும் மாணவ, மாணவிகளுக்குப் படிப்பு தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், தமிழக அரசு பல்வேறு அதிரடிச் சலுகைகளையும், விலையில்லாப் பொருட்களையும் வழங்கி வருகிறது.
பயிற்சி காலத்தின் போது பயிற்சியாளர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் வருமாறு.
மாதாந்திர உதவித்தொகை: பயிலும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் பிரதி மாதம் ரூ.750 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
விலையில்லாப் பொருட்கள்: மாணவர்களுக்கு விலையில்லா சீருடைகள் (Uniform), விலையில்லா பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள் (Drawing Instruments) மற்றும் 1 ஜோடி விலையில்லா காலணிகள் (Footwear) ஆகியவை வழங்கப்படும்.
போக்குவரத்து மற்றும் மிதிவண்டி: மாணவர்களின் பயண வசதிக்காக விலையில்லா மிதிவண்டி (Bicycle) மற்றும் கட்டணமில்லா அரசு பேருந்து போக்குவரத்து வசதி (Free Bus Pass) ஆகியவை முழுமையாக வழங்கப்படுகின்றன.
மாதம் ரூ.1000 சிறப்புத் திட்டம்: தமிழக அரசின் புகழ்பெற்ற 'தமிழ்ப்புதல்வன் திட்டம்' மற்றும் 'புதுமைப்பெண் திட்டம்' ஆகியவற்றின் கீழ் தகுதியுள்ள மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1000 உயர்கல்வி உதவித்தொகை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
தனியார் ஐ.டி.ஐ-களுக்கான அரசு உதவி மற்றும் வேலைவாய்ப்பு உறுதி
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டின் (Government Quota) கீழ் சேர்க்கப்படும் பயிற்சியாளர்களுக்கான முழுக் கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்கும் என்பதால், ஏழை எளிய மாணவர்களும் கட்டணமின்றி தனியார் ஐ.டி.ஐ-களில் படிக்க முடியும்.
மேலும், தொழிற்பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு, முன்னணித் தொழிற்நிறுவனங்களில் ஓராண்டு காலத்திற்கு மாதாந்திர உதவித்தொகையுடன் (Stipend) கூடிய ஒப்பந்த அடிப்படையிலான தொழிற்பழகுநர் பயிற்சி (Apprenticeship) வழங்கப்படும். அதுமட்டுமின்றி, வளாக நேர்காணல் (Campus Interview) மூலமாகப் படிப்பை முடித்தவுடனேயே 100% வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும்.
கூடுதல் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்
தொழிற்பயிற்சி சேர்க்கை, பாடப்பிரிவுகள் மற்றும் கூடுதல் சந்தேகங்களுக்குப் பின்வரும் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:
செம்பனார்கோவில் அரசு ஐ.டி.ஐ: மின்னஞ்சல்: govtitisembanarkoil@gmail.com தொலைபேசி எண்: 9677484954
மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் (தஞ்சாவூர்): மின்னஞ்சல்: gdetanjore2018@gmail.com | தொலைபேசி எண்: 9442215972
எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய இளைய தலைமுறையினர், இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி, தொழில் படிப்புகளில் சேர்ந்து தங்களின் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















